பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்145


நடப்பவெல்லாம் கனவா?

மும்முறை மாடு பேசும் முறையினை உமறு கேட்டுத்
தம்முறை யான நெஞ்சில் தயக்கமும் தவிப்பும் பெற்றே
எம்முறை யான மாடும் இன்னுரை பேசல் என்றும்
நம்முலகத்தில் இல்லை நடப்பது கனவோ?” என்றார். 17

உமறுவே! யாரைப் பகைத்து வந்தீர்?

“ஒளிவிடும் படையை ஏந்தும் உமறுவே! என்றன் வாயில்
வெளிவரும் சொல்லினால்தான் விருப்பமாய் உமை அழைத்தேன்
அளவிலா வீரத் தோடும் ஆருடன் பகைத்து வந்தீர்?
விளம்பிடும்” என்று கேட்டு வீரர்முன் மாடு நிற்க; 18

நல்ல வயலில் களை போன்றவன் முகம்மது

வியப்பினை விடுத்துச் சொற்கள் விளம்பிய மாட்டை நோக்கி
இயம்பினார் உமறு “மாடே இனியதாம் மக்கா ஊரில்
நயன்மிகு குறைசியர்க்குள் நன்னெறி அற்ற ஓராள்
வயலினில் களைபோல் உள்ளான் “மகம்மது” பேரும் கொண்டான். 19

நம் பழையமுறைகளை வெறுக்கின்றான்

“புதிய நன்னெறி உண்டென்று புகன்று தன் முன்னோர் காட்டும்
விதிகளை வெறுக்கச் சொல்லி வீண்மொழி புகல்கின்றானாம்
அதிர்படை எடுத்து வந்தேன் அன்னவன் என்றன் முன்னே
எதிர்படின் வெட்டி வீழ்த்தி ஏகுவேன் ஊருக்” கென்றார். 20

காளை எள்ளிச் சிரித்தது

காளைதான் அதனைக் கேட்டுக் கலகல எனச் சிரித்துக்
“கோளைக் கைவிட்டுப் போங்கள் கோமகனாரைக் கொல்ல
வாளைஏன் ஏந்தி வந்தீர்? வாய்மையார் தம்மை எந்த
நாளிலும் சாய்த்தல் உம்மால் நடவாத செயலே ஆகும்; 21

அவர் நடப்பதைக் கூடத் தடுக்க இயலாது

“படைவலி பலவும் பெற்றீர்; பக்கத்தார் துணையும் பெற்றீர்
இடைவெளி இலாமல் உண்மை இதயத்தார் அருகில் சென்று
நடையினைத் தடுக்கக்கூட நடவாது நும்மால்” என்று
மடைக்கடங்கா வெள்ளத்தை மாடுமுன் தடுத்து நின்றே; 22