அபூசகுல்
உமறுவைக் கிண்டல் செய்தான்
காளையை
வியந்து கூறிக் கலங்கிய உமறு தம்மை
ஆளையே விழுங்கு வோனாம் அபூசகுல் எள்ளி நோக்கி
“வாளையே வைத்திருந்தும் வலிமையைத் தோற்று வீணில்
தோளையே மலைகள் போலத் தூக்கியே வந்தீர் ஈங்கே!” 35
கையாலாகாமல்
வந்தீரே!
“வீரமும் நன்று; நீவிர் விளம்பலும் நன்று; காளை
ஓரமாய்ச் செல்லக்கூட உம்மாலே ஆகவில்லை
காரமாய்ச் சொல்லிச் சென்றீர் கையாலா காமல் வந்தீர்
ஊரமை முகம்மதென்போன் உளவஞ்சம் அறியீர் போலும்” 36
வஞ்சமனம் உள்ளவன் முகம்மது
“வஞ்சனை புரிய வல்லான் வலிமையை ஒழிக்க வல்லான்
நஞ்சினை மனத்துள் வைத்த நரியவன் தந்திரங்கள்
கொஞ்சமா எண்ணிப் பார்த்தால் கோடியைக் கூடத் தாண்டும்
அஞ்சியே வந்தீர்” என்றே அபூசகுல் உரைக்கக் கேட்டே. 37
நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?
வாய்மையார் உமறு “நான் ஏன் வறிய பொய் உரைக்க வேண்டும்?
போய் மெய்யாய்க் கண்ட தைத்தான் புகன்றனன்; புதுமை செய்வார்
சேய்மையார் எனினும் கண்டு செப்புதல் உயர்ந்த” தென்றே
தூய்மைகொள் உமறு நல்லார் சொல்லியே நீங்கிச் சென்றார். 38
உமறு அடுத்தநாள் போனார்
அடுத்தநாள் எடுத்தவாளும் அரும்பகை மனமும் ஏந்தி
“உடுத்திகழ் வானத்தூதர் உருவினை அழிப்பேன் என்று
வடுத்தவிர் உமறு போகும் வழியிலோர் கூட்டம் தானே
தொடுத்த தோர் வழக்குப் பற்றித் தொடர்ந்தவர் ககுபா போனார். 39
ககுபாவில் நீதி வேண்டினார்
இறைஉரு உள்ள கஃபா இல்லத்தில் மக்கள் எல்லாம்
அறைபுகழ் சுவா கென்கின்ற அவர் வணங்க இறையை நோக்கி
நிறைமனம் கொண்டு நின்று நேரினில் வழக்குக் கூறி
“முறை ஒன்று வழங்கு” கென்றே முனைப்புடன் வேண்டலானார். 40
|