உருவம் பேசியது
அன்பினை மாய்க்க எண்ணும் ஆர்வினார் உமறு வந்தார்
முன்பு அவர் நெருங்கும்போது முறையிட்ட சுவாகு என்கின்ற
பண்புரு நேர்முன் வந்து பணிஉமறு அணியார் கேட்கத்
தன்புகழ் நாவெடுத்துத் தந்ததோர் செய்தி ஆங்கே; 41
நபிகள் கூறுவதே கலிமா ஆகும்
மக்களே! விளம்பும் என்றன் மாண்புரை மனத்தில் கொள்க;
தக்கவர் நபிகள் பெம்மான் தனியவன் விடுத்த தூதர்
எக்கவின் படைப்பினுக்கும் ஏந்தலே தலைவர் ஆனார்
அக்கலை நபியார் கூறும் அரியசீர் கலிமா ஆகும்; 42
திருக்குர் ஆன் கூறும் நெறியில் செல்க
உரைநெறி வழுவாத் தூய உயர்தனித் திருக்குர் ஆனை
விரைவில் நீர் வணங்கி வாழ்வில் வெல்வழி தேர்ந்து கொள்வீர்
புரைஇலா வழக்கை என்பால் புகல்வதும் வீணே என்றாங்கு
உரைசெய்த உருவோ பின்னர் உரையற்றுக் கல்லா யிற்றே! 43
காளையைப் போல் கல்லும் சொல்லுகிறதே!
கல்லுரு பேசக் கேட்ட காதுளோர் வியந்து தாமும்
கல்லுரு வாகி நின்றார் கனிவுறும் உமறு தாமோ
நல்லுருச் சொற்கள் தாமும் நமக்குமுன் காளை சொன்ன
பல்லுரை தாமும் ஒன்று பட்டதை எண்ணிப் பார்த்தார். 44
உமறு தம்தங்கையைக் காணச் சென்றார்
இவைஎலாம் ஏதோ ஒன்றின் எழிற்பணி எனவே எண்ணி
நவைஎலாம் நீங்குகின்ற நன்மனத்து உமறு நல்லார்
தவறிலாத் தங்கையான தகுநலப் பாத்திமாவை
உவகையும் ஆர்வும் பொங்கி ஓங்கமுன் காணச் சென்றார். 45
பாத்திமாவும் அவர் கணவரும் கலிமா ஓதினார்
சென்ற அந்நேரம் தன்னில் செவ்வியர் பாத்திமாவும்
ஒன்றிய கணவரான உயர்மனச் சகீது என்பாரும்
நன்றியல் கப்பாபு என்பார் நவின்றிடும் கலிமா கேட்டே
அன்றில்கள் போலிருந்தார் அவர்மனை அகத்தின் கண்ணே; 46
|