பக்கம் எண் :

150துரை-மாலிறையன்

பாத்திமா கப்பாபைப் பதுங்க வைத்தார்

வந்தவர் தம்மை அன்னார் வருபுலி போலக் கண்டார்;
நந்தவத் திருக்குர்ஆனை நவிலும்நம் நிலை கண்டாரேல்
நொந்தவர் நம்மைத் தாக்கி நோகவும் செய்வார் என்று
முந்தவே கப்பாபைத் தம் முயற்சியால் பதுங்க வைத்தார்; 47

உமறுவை வரவேற்றார்கள்

இருவரும் இணைந்து சென்றே எதிர்வரும் உமறு தம்மைப்
பெருகிய ஆர்வத் தோடும் பேசியே வரவேற்றார்கள்;
அருகிலே வந்த அன்னார் அவர்களை நோக்கி, “ஈங்கே
வருகையில் செவி இனிக்கும் வகைமொழி கேட்டு வந்தேன்; 48

எதை ஓதிக் கொண்டு இருந்தீர்?

“அவ்வொலி யாது சொல்வீர்? அகந்தனைக் கவரக் கண்டேன்
செவ்வையாய் உரையும் என்று சீறினார் சகீது முன்பே;
வெவ்விய சொல்லுரைத்து விழைமனக் காதலாரை
அவ்வியல் உடன்பிறந்தார் அதட்டுதல் கேட்டு நங்கை; 49

பாத்திமாவின் மண்டையில் அடித்தார்

மனம்அமை வுறவே பேசி மணாளரின் பெருமை காக்க
முனம் வந்த பாத்திமாவின் முன்மண்டை வீங்குமாறு
சினம் பொங்கத் தண்டால் தாக்கிச் சிறுமையே உமறு செய்ய
இனமயில் நெற்றி மீதில் இரத்தமே வழியக் கண்டார்; 50

ஐயோ! பொறுமை இழந்து அடித்து விட்டேனே!

குருதியைக் கண்ட போது கொடுமனம் இரங்கி, “ஐயோ!
பொறுமையை இழந்தேன் என்று தமக்குளே புகன்று “நீவிர்
அருமையாய் ஓதி னீரே அறிவியும் அதனை” என்று
பெருகிய ஆர்வம் கொண்டு பின்னும் வற்புறுத்திக் கேட்டார். 51

திருக்குர்ஆன் ஓதினோம் என்றனர்

இனியதை மறைப்பதற்கே இயலாத நிலையில் பெண்ணார்
கனிந்தவ ராகக் கேட்கும் கருத்தினால், “நாங்கள் ஈங்குப்
புனிதநூல் திருக்குர் ஆனே புகன்றனம் - தூய்மை இன்றித்
தனிப்புகழ்த் தீன்நல்லாரும் தம் கையால் தொடர் முன்வந்தே. 52