நீங்கள் உடலைத் தூய்மை செய்து வந்தால்
திருக்குர் ஆனைத் தொடலாம்
நீராடி நேரில் வந்து நீரதைத் தொடுவீர் ஆயின்
போராட வேண்டா உம்முன் புத்தகம் தருவோம் என்றே
கார்ஆடும் கூந்தல் நல்லார் கனிவோடும் கூறக் கேட்டு
நேர்ஓடிச் சென்ற செம்மல் நீராடி ஆங்கே வந்தார்; 53
உமறு திருக்குர் ஆனைத் தொட்டார்
மேனியில் ஒழுகும் தண்ணீர் மின்னிட நெஞ்சம் தன்னுள்
தேனிகர் அன்பு வெள்ளம் தேங்கிடக் கண்களுக்குள்
வானியல் சிறப்புக் காணும் வற்றாத ஆர்வம் பொங்கத்
தீன்நெறித் திருக்குர்ஆனின் தேறலை உமறு தொட்டார். 54
தேன்உண்ட குழந்தை போல் ஆனார்
ஒட்டகத் தோலில் கண்ட உயர்திருக்குர்ஆன் வாய்மைச்
சட்டமாம் நாற்பத் தேழாம் தனித்திருப்பகுதி தன்னைத்
தொட்டதில் முகம்மதென்னும் சுடர்பெயர் சுவைத்தபோது
சொட்டுத் தேன் நாவில் பட்டுச் சுவைத்திடும் சேய்போல் ஆனார்; 55
ஆ! ஆ! அரிதான கருத்துக்கள்
அரிதான கருத்துக் கூறும் அரியநூல் இதனைச் சொல்லப்
பெரிதான தன்மை கொண்டோர் பேருலகத்தில் இல்லை;
கரிதான நெஞ்சத்தையும் காத்தருள் விளைக்கும் என்று
வறிதான நெஞ்சர் அக்கால் வளத்தாராய் மகிழ்ந்து சொன்னார். 56
அனைவரும் உமறுவின் எதிரில் வந்தார்கள்
வளத்தாரின் மகிழ்வைக் கண்ட மங்கையும் சகீதும் நல்ல
உளத்துக்கப் பாபென் பாரும் உமறுவின் எதிரில் வந்தார்
களைத்தார்கள் மூவர் முன்னும் கப்பாபு “நடப்பவெல்லாம்
நலத்தன்மை நம்மை நாடி வருவதை நவிலும்” என்றார். 57
முகம்மது இறைவன் பால் வேண்டினார் அது நடந்தது
“ஒப்பாரும் இல்லா உண்மை உமறுவே! முன்னிராவில்
முப்புவி வணங்கும் மேன்மை முழுமுதல் இறைவன் முன்னர்
ஒப்பிலாத் தீனை நீவிர் ஒப்புக்க வேண்டும்” என்று
செப்பிய வேண்டல் கேட்டேன் சிறப்புற நடக்கக் கண்டேன். 58
|