பக்கம் எண் :

152துரை-மாலிறையன்

அவ்வாறாயின் முகம்மது எங்கே உள்ளார்?

வேண்டுதல் எதுவானாலும் விளைப்பவன் ஒருவன் தானே
மாண்டசீர் நபியார் வேண்டல் மலர்ந்ததிங்(கு) என்றார் கப்பாபு
ஆண்டுநல் உமறு நல்லார் “அரியவர் அருளின் கோமான்
ஈண்டவர் தங்கி உள்ள இடமெது சொல்வீர்?” என்றார். 59

சபாமலைக் குன்றின் அருகில் உள்ளார்

“எழில் சபா மலைக்குன்றத்தின் இறக்கத்தில் உள இல்லத்தில்
பழியிலாத் தோழர் சூழப் பரமனின் தூதர் உள்ளார்
அழிவிலா நெறியைக் காண ஆங்குநீர் செல்க” என்றே
விழியிலே ஆர்வம் பொங்க விளம்பினார் கப்பா(பு) அன்பர். 60

உமறு இல்லத்தின் கதவைத் தட்டினார்

மலைப்பெயர் கேட்ட போதே மனக்கிளர்வுற்ற வீரர்
நிலைபெயர்ந்தோடும் மற்றோர் நெடியதோர் குன்றம் போல
நலப்படப் பெயர்ந்து போனார் நாடும் அவ்வில்லம் கண்ணில்
புலப்படக் கதவைத் தட்டிப் புறம் நின்றார் உமறு கோனே; 61

நபித் தோழர் அஞ்சினார்

தட்டுதல் எவரோ? என்று தகுநபித் தோழர் எல்லாம்
ஒட்டிஅக் கதவின் ஓட்டை ஒருவழி மூலம் பார்த்தார்
கட்டிய படையிடுப்பும் கையினில் ஈட்டி தானும்
பட்டன கண்ணில் பாவம் பதறியே நடுங்கிப் போனார். 62

அஞ்ச வேண்டாம் என்றார் அமுசா

நடுங்கிய தோழர் முன்னே நல்லவர் அமுசா எல்லாம்
“ஒடுங்கிய தன்மை வேண்டா ஒட்டியே வந்துள்ளாரே
அடங்கியே நடப்பார் என்றால் அப்புவிச் சிறப்புக் கொள்வார்
அடங்காரேல் அழித்துச் சாய்ப்போம் அஞ்சாதீர்” என்று சொன்னார். 63

முகம்மது உமறுவை வரவேற்றார்

திறந்தனர் கதவை; அன்பைத் திறந்தநல் உமறு தம்மைச்
சிறந்தவர் நபியார் காணச் சென்றனர் மறத்தை எல்லாம்
மறந்தசீர் அறக்கோமானை மகம்மது தழுவிக் கட்டிப்
“பறந்தவராக வந்தீர் பகருக ஏனோ?” என்றார். 64