பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்153


எனக்குக் கலிமா ஓதுக

“செம்மையோர் போற்றுகின்ற சீர்முகம்மதுவே! தாங்கள்
இம்மைக்கும் மறுமைக்கும் வான் இனிய நல் நெறிக்கும் ஆன
மெய்ம்மையை உணர்த்துகின்ற மிகுநலக் கலிமா தன்னை
நம்மனம் களிக்குமாறு நவிலவே வந்தேன்” என்றார். 65

நபி பெருமான் தொழுகை கற்றுத் தந்தார்

கேட்டவர் நபியார் உள்ளம் கிளர்ந்தவர் ஆகி, “எல்லாம்
நாட்டிட வல்லான் அல்லா நல்லவன் புகழ்எல்லாம் வான்
நாட்டவன் தனக்கே” என்று நவின்றனர். உமறு நல்லார்
நாட்டமும் மனமும் ஒன்றி நபிசெயும் தொழுகை செய்தார். 66

அபூசகுல் உள்ளம் நைந்தான்

“அஞ்சாத உமறு வேங்கை அரிய தீன்நெறிக்குள் பாய்ந்தார்
வஞ்சகர் வலையில் மாட்டி வருந்துவார்” என்னும் சொல்லை
நஞ்சான உள்ளம் கொண்டு நகும்அபூ சகுல்தன் முன்னே
அஞ்சாறு பேர்கள் சூழ அவரிடம் சொல்லி நைந்தான். 67

நாற்பது பேர் நபித்தோழர் ஆயினர்

தோற்பது தீனே என்று சொல்வதே தொழிலாய்க் கொண்டோர்
ஆர்ப்பது மெல்ல மெல்ல அடங்கிடத் தீன்நற்போக்கை
ஏற்பதே சிறப்பாம் என்றாங்கு எண்ணிய அன்புள்ளத்தார்
நாற்பது நபித்தோழர்கள் நல்லாரைச் சூழ்ந்திருந்தார். 68

***