பக்கம் எண் :

154துரை-மாலிறையன்

4. கபீபு மன்னர் பேசிய படலம்

நபிகள் அமைதி நோக்கிப் போதல்

நற்கல்வி அறிவாற்றல் வீரம் மிக்க

நாவன்மை உமறுகத்தா, தம்மைப் போன்றோர்

பற்பலவாம் உருவவழி பாடுசெய்து

பணிகின்ற நிலைமையினை விட்டு நீங்கிப்

பொற்பாத முகம்மதுவின் வாய்மை கண்ட

புகழ்மிக்கோர் நாற்பதின்மர் ஆகிவிட்டார்

நற்பாதை கண்டவர்கள் எல்லாம் கூடி

நடந்தார்கள் தனிமையிலே அமைதிநாடி; 1

இயற்கைகள் வணங்கின

தோழர்கள் சூழ்ந்திருக்க நடுவிடத்தே

தோன்றுகின்ற சூரியன்போல் அமர்ந்திருந்தார்

வாழவழி சொல்லுகிற அன்புக் கோமான்

வற்றாத இறையருளை எண்ணிக் கொண்டே;

சூழ உள மரஞ்செடிகள் கொடிகள் மற்றும்

சொந்தமுள புள்விலங்குக் கூட்டம் எல்லாம்

ஆழ அன்பு செயும் வள்ளல் இவர்தாம்” என்றே

ஆங்காங்குச் சலாம் கூறி நின்ற வாமே! 2

அரபி வேடன் சந்திப்பு

அரியதாம் அக்காட்டில் உணவுக்காக

அலைந்து திரிந் தவனான அரபி வேடன்

உரியதாம் வலைவீசிக் காத்திருந்தான்

ஊக்கத்தால் நிரம்பியவன் ஒருவாறாகப்

பெரியதாம் உடும்பொன்றைப் பிடித்துக்கொண்டு

பேருவகை கொண்டதனை ஏந்திச் சென்றான்

கரியதாம் அவனுள்ளம் தூய்மை கொள்ளக்

கடவுள்தன் தூதர்முன் செல்ல வைத்தான். 3