இவர் யார்? எனல்
பொன்மணிகள் நடுவில் செம்மணியே போலப்
பொலிவுடனே அமர்ந்துள்ள அண்ண லாரை
முன்மகிழக் கண்டவனாம் அந்த வேடன்
மொய்த்திருந்த அன்பர்களை நோக்கிக் கேட்டான்;
“நன்மையுளீர் உம் நடுவில் அமர்ந்திருக்கும்
நல்லோர்யார்? பேரென்ன? தொழிலும் என்ன?
என்மனம்தான் இவைஅறியச் சொல்வீர்” என்றான்
இதயத்தால் நல்லவற்றை நாடும் வேடன்; 4
இவர் அல்லாவின் தூதர்
அறியாமை கொண்டவன்தன் ஐயம் போக்கும்
ஆர்வத்தால், அவன்தன்னை நோக்கித், “தம்பீ!
நெறியில்லா நெறிசெல்லும் உலகைக் காக்க
நேர்வந்த அல்லாவின் தூதர்” என்றார்;
கறிஆக்க உடும்பேந்தி நின்றவன்தான்
கருத்தோடும் பெருமானை நோக்கி “ஐய!
நெறிஎன்றீர் எந்தநெறிக்குரியீர் நீவிர்?
நெறிகளுக்குள் எந்த நெறி சிறந்தது?” என்றான். 5
நானே இறுதிநபி
“ஆர்வமுடன் கேட்கின்றான் நல்லோன்” என்றே
ஐயன் அருட்பெருமானும், “அன்ப! யானே
நேர்வந்த கடவுள்தன் இறுதித் தூதன்
நெடியபுகழ்த் திருக்குர் ஆன் இறைவனாலே
சீர்வந்த மண்ணின்மேல் செப்ப வந்தேன்
சிறப்புடைய அரியநெறி கூற வந்தேன்
பார்வந்த என் சொல்லைப் பற்றி வாழ்வோர்
பாவத்தின் கறைநீங்கிப் பதவி கொள்வார். 6
|