சான்று ஒன்று வேண்டும்
ஒப்பாமல் புறக்கணிப்போர் நரகுள் வீழ்வர்;
உண்மைநீ அறிந்தாய்நன் னெறியை நாடு
தப்பாதே” என்றார் நம் அண்ணல் கோமான்;
தக்கோனும் அவர் உரையை ஒப்புக் கொண்டும்
“இப்போதே சான்று ஒன்று கிடைக்கு மாயின்
இதயத்தால் ஒப்பிடுவேன்” என்றான்; “தம்பீ
செப்புகிற சான்று எவர் தாம் செப்ப வேண்டும்
செப்பிடுவாய்?” என்றார் அச் செம்மை யோரே! 7
உடும்பைப் பேச வையுங்கள்
“ஐயனே! என் பசிக்கான உணவுக் காக
அரிதாய்ஓர் உடும்புதனைப் பிடித்து வந்தேன்
செய்யனே அவ் உடும்பு தனைத் தங்க ளோடு
சிறப்புறவே உரையாடச் செய்வீர் ஆயின்
ஐயமிலை அப்போதே நீவிர் தாமே
ஆண்டவன்தான் அனுப்பி வைத்த நபியே என்னும்
மெய்யதனை உலகுக்கே உரக்கச் சொல்வேன்
மேன்மையுடன் இப்போதே செய்க” என்றான், 8
உடும்பே பேசு
எளியவனின் சொல்கேட்டோர், “உடும்பை ஈங்கே
என்றன்முன் விடுஎங்கும் போகாது” என்றார்;
ஒளியவரின் சொல்படியே அவனும் விட்டான்
ஒளிமுன்னர் முகம்திருப்பும் பூவைப் போல
அளியதான அவ்வுடும்பும் அண்ணலாரை
ஆர்வமுடன் பார்த்தபடி நின்றபோது
வெளிவான்மண் தீநீர்கால் அனைத்தினுக்கும்
வேந்தனவன் தூதனாரும் “உடும்பே” என்றார்; 9
|