பக்கம் எண் :

158துரை-மாலிறையன்

புதுமைசெய வரும்நபிகள் இனிமேல் இல்லை;

புண்ணியரே! நீர் சொல்லும் நெறியைப் போற்றி

மது நுகரும் தேனீக்கள் போல வாழ்ந்தால்

மாண்புண்டே தவிர மற்றோர் உய்வதில்லை;” 13

வேடனின் மனமாற்றம்

எனஉடும்பு தானுரைத்த சான்று தன்னை

இருசெவியால் கேட்டறிந்த வேடன்! ஆவி

மனம்உடம்பு தாமெல்லாம் ஒன்றி நின்று

“மாண்புடையீர் உண்மையினைத் தெரிந்து கொண்டேன்

இனமனைவி மக்களொடும் பாவம் செய்தேன்

இனிமேல்யான் இசுலாத்தைப் பிரியேன்” என்று

முனம்நின்ற முகம்மதுவின் தாள்கள் போற்றி

முத்தங்கள் இட்டு அன்புப் பித்தன் ஆனான்; 14

உடும்பே நீ காட்டுக்குப் போ

கட்டவிழ்ந்து நின்றநல்ல உடும்பு நெஞ்சம்

கனிந்துநின்ற அனைவரையும் கண்ணால் நோக்கி

மொட்டவிழ்ந்து மணம் வீசும் நிலைகண்டாற்போல்

முன்மகிழ்ந்த தோழர்களை வணங்கி வன்பு

பட்டவிழ்ந்த வாழ்க்கை இன்றோ அன்பி னாலே

பழியகன்று விட்டதென விடையும் கேட்கப்

பட்டவிழ்ந்த மணிநாவார் உடும்பை நோக்கிப்

படர்காட்டுள் விரைக” என அனுப்பி னாரே! 15

முகம்மதுவின் அருளுணர்வு

காட்டிறைச்சி உண்ணுகிற தன்மை உள்ள

கண்ணோட்டம் இலானுக்கும் அன்பு காட்டி

ஊட்டுகிற அன்னையைப்போல் உணர்வு மிக்கார்

ஒப்பில்லா முகம்மதுகோன் உடும்பு தன்னை

மீட்டனுப்பி வைத்திட்ட செயலி னாலும்

மின்னும்அருள் உணர்வுதனைப் பொலியச் செய்தார்

நாட்டவர்கள் இந்நிகழ்வு தன்னைக்கண்டு

நடுக்கமிலாப் பெருவாழ்வு தேடு தற்கே! 16