|
உடும்பு பேசி அகன்றபின்
உரையது பேசி ஒளியரை வாழ்த்தி
உடும்புதன் கானகம் செல்லப்
புரையிலாத் தோழர் புறம்புறம் சூழ்ந்து
போற்றிட நடந்தசீர் நபியின்
நிறைபெருங் கடவுள் நெறிநலம் எண்ணி
நெகிழ்ந்தனர் உலகினர் எனினும்
அறைபகை நெஞ்சன் அபூசகுல் முதலாம்
அகவிருள் கொண்டவர் எதிர்த்தார்; 17
உத்துபாவின் ஆற்றலும் சிறப்பும்
அவ்விய மனத்தார் அனைவரும் கூடி
அழித்திடு நினைவொடும் துடித்தார்
அவ்வணம் துடித்தோர் பகைக்குழு வதனில்
அரியவன் உத்துபா இருந்தான்
செவ்விய உள்ளம் சீர்அறி வாற்றல்
சிறப்புற மாமறை கற்றோன்
எவ்வகை யாலும் எழில்உரை வல்லான்
எதிர்ப்பவர் அவன் முனம் நில்லார்; 18
முகம்மதுவின் புகழை அழிப்பேன்
அவையரை நோக்கி அவன் உரை செய்தான்,
“அகம்மது முனம்எனை விடுப்பீர்
நவையுளான் என்றே நான்நிலை நாட்டி
நற்புகழ் நாம் பெற வைத்துப்
புவியினில் அன்னோன் புகழினை மாய்ப்பேன்
பொய்யிலை புரிகுவன்” என்றான்.
இவைநலம் என்றே இவன்தனை அனுப்ப
எண்ணினர் முடிவு செய்தனரே. 19
|