பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்163


நபிபெருமான் அருள்மறை பொழிந்தார்

அருமறை மீதில் ஆர்வது பொங்க

அதன்பொருள் கேட்டவன் முன்னே

திருமறை ஒளியார் உயர்திருக் குர்ஆனில்

திகழ் ஒரு பகுதியை ஒதிப்

பொருள்மறை வானப் புதுப்புதுப் பொருளைப்

பொன்னென மணியெனத் தோண்டி

அருள்நபி மகனார் அவன்மனம் நிரம்ப

அளித்தனர் அன்பொடும் குழைத்தே! 29

உத்துபா மனம் தெளிதல்

பால்நினைந் தூட்டும் பரிவினள் தாய்போல்

பதமுற விரிவுரை தந்த

மேல்நினை வுள்ள மிகுநல நபியார்

மேன்மையை எண்ணிய உதுபா

“தேனினை வோடு திகழ்நபி இவரே

திருக்குர்ஆன் இறைவனின் உரையே

நானிது தெளிந்தேன் ஏனையோர் தெளியார்

நல்லவர் முகம்மது நபியே” 30

உத்துபா மனம் மாறிச் சென்றான்

எனப்பல வகையாய் எண்ணிய உதுபா

ஏற்றமும் மாற்றமும் அடைந்தான்

இனத்துள மக்கள் இழிவெனக்கூறி

எனக்கொரு துன்பமே செயினும்

மனத்துள வாய்மை மகம்மது நபியால்

மனம்தெளி வுற்றது கண்டேன்

தனக்குளே இந்தத் தகுமொழி உரைத்துத்

தம்மவர் இருப்பிடம் சேர்ந்தான். 31