பக்கம் எண் :

166துரை-மாலிறையன்

முகம்மதுவை எப்படி வெல்வது?

பல்வகையாய்ப் பிரிந்திருந்த மக்கள் எல்லாம்

பகர்ந்த அபூசகுல் சொல்லால் ஒன்று சேர்ந்து

கொல்வகையை ஆய்ந்தார்கள்; பெம்மான் தம்மைக்

குறுமொழியால் இகழ்ந்தார்கள், “எம்மை ஈங்கே

நல் வகையில் வரவழைத்தீர் நன்றி சொல்வோம்

நால்வகையாய் இருந்தவரை ஒன்றச் செய்தீர்;

வெல்வகையாது என்பதையும் விளக்கமாக

விளம்பி விடில் சிறப்பாகும்” என்றார் மக்கள். 38

எதிர்பார்த்தபடியே மக்கள் பேசினர்

என்னவகை முடிவுதனை எதிர்பார்த் தானோ

இயம்பினவும் அவையாக இருக்கக் கேட்டு

மன்னவன்போல் மார்தட்டி அபூசகுல் தன்

மனந்திறந்து, “நன்மக்காள்! நமது மாண்புத்

தொன்னலத்தைக் காப்பதற்குத் துணிவு வேண்டும்

தொடர்ந்து நமது ஊர்ப்படைகள் தாக்கினாலும்

தன்னரிய மந்திரங்கள் யாவும் காட்டித்

தப்பித்து வென்றிடுவான்; அதனால் கேளீர். 39

கபீபு மன்னனைத் துணைக்கு அழைப்போம்

நம்மரிய அரபியர்கள் குலத்தில் இன்று

நாட்டாட்சி நடத்துநர்கள் பல்லோர்க் குள்ளும்

வெம்மையுறு திமசு என்னும் நாட்டை ஆளும்

வீரமிகும் மாலிக்கின் மைந்தன் ஆன

செம்மைமிகு கபீபென்னும் வேந்தன் உள்ளான்

சிறப்புடையோன் அன்னவனைத் துணைக்கழைத்தால்

நம்மானம் காத்திடுவான் வெல்வான்” என்றே

நவின்றிருந்தான் அரிமாமுன் ஓநாய் போன்றே! 40