பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்175


மிகவும் கொடியவன் முகம்மது என்றான்

புனிதமாம் நமது மாண்பைப் பொசுக்கவே வந்தான் தானோ?
இனிதாக வாழ்ந்த நம்மை இழிவுற வைக்கத் தானோ?
மனிதரின் மதிப்பை எல்லாம் மாய்த்திட வந்தான் தானோ?
இனிநமது அன்பு ரைகள் இவனிடம் செல்லா” தென்றார். 6

பழுக்காத பிஞ்சைப் போன்றவன்

கொழுப்பான பேச்சும் நந்தம் கூட்டத்தை இகழ்ந்து பார்க்கும்
அழுக்கான நோக்கும் தீமை அறிவிப்பே செய்யும் நாக்கும்
இழுக்கான செயலும் செய்ய இவனைமிஞ் சுபவர் இல்லை;
பழுக்காத பிஞ்சைப் போன்றான் பகர்வதில் கனிஒப்பு ஆனான். 7

அவன்செயல் அனைத்தும் நாற்றம்

பன்னுதல் வீணே ஐயா! பாவியான் செயும் தீமையை
உன்னுதல் எல்லாம் மக்கள் உள்ளத்தை அழித்தல் ஒன்றே
மன்னுதல் வஞ்சமிக்க மனமென்றே வாழுகின்றான்;
மின்னுதல் அவன்தோற்றம்தான் விள்ளுதல் எலாம் நாற்றம்தான்; 8

முகம்மதுவிடம் பேசிப் பார்ப்போம்

“அறிவித்த தெல்லாம் கொஞ்சம் ஆயிரம் தீமை மிஞ்சும்;
விரிவஞ்சி அவற்றை எல்லாம் விலக்கினோம்” என்றான் வஞ்சன்;
தெரிவித்த வற்றை எல்லாம் செவியுற்ற கபீபு மன்னர்
“வருவித்து நாளை அந்த மகம்மதை அறிவோம்” என்றார். 9

இருள் தோன்றியது

ஒளிக்கதிர் வீசி மண்ணை உயிர்பெறச் செய்த வெய்யோன்
குளிக்கநீல் கடலின் உள்ளே குதித்தானைப் போல மேலை
வெளிக்கடல் மூழ்கிச் சென்றான் விளைத்த வஞ்சங்கள் எல்லாம்
வெளிப்படச் செய்வார் நெஞ்சை விளக்கிட இருள்தோன்றிற்றே? 10

அபூசகுல் கபீபு மன்னனைக் காணச் சென்றான்

இருட்டுளம் மாறி நல்ல இதயங்கள் எழுதல் போல
மருட்டிய இருளும் நீங்க மணிக்கதிர் கிழக்கெ ழுந்தான்;
குருட்டுள ஆபூச குல்தன் கூட்டத்தை அழைத்துக் கொண்டு
பொருள்திகழ் கபீபு மன்னர் புகழ்மனை நோக்கிச் சென்றான். 11