| 
       அபூத்தாலிப்பு நன்றாக உடுத்தி வந்தார்
       
      மன்னவர் கபீபு தம்மை மறச்சுடர் அபூத்தாலிப்பு 
      முன்னவர் தலைமைக் கேற்ற முறையினில் உடை உடுத்திப் 
      பின்அவர் புகழ்ச் சான்றோர்கள் பேணிட வந்தார் வான 
      மின்னவர் உடலைப் போர்த்து மின்னியே வருதல் போன்றே;		12
       
      கபீபு அரசர்முன் அபூத்தாலிப்பு
       
      இரண்டுவெண் திங்கள் ஆங்கே எதிர்எதிர் வந்த தைப்போல் 
      முரண்படல் இல்லா நெஞ்ச மொய்ம்பினர் இருவர் நின்றார்; 
      திரண்டு வந்தவர்கள் அன்பு திகழ்மனத் தினராய்ச் சூழ்ந்தார்; 
      மருண்டனர் அபூச குல்தன் மனத்தினார் கண்ட போதே;			13
       
      பகை உண்டாகலாமா?
       
      அன்பு அறிவாற்றல் மேன்மை அடைந்தசீர் அபூத்தா லிப்பே! 
      மன்புகழ்ப்  பெருமை மிக்க மக்காவின் குலத்தி னர்க்கு 
      வன்புள தாகுமாறு வாழ்பவர் எவரா னாலும் 
      பண்புள நீர்தாம் அன்றோ பகைஅறச் செய்தல் வேண்டும்.			14
       
      உம்தம்பி மகன் வம்பு செய்கின்றானாமே!
       
      உம்பியின் புதல்வன் ஆன ஒரு மகன் மரபை மீறி 
      வம்புசெய் கின்றா னாமே வரமது பெற்றான் போலக் 
      கொம்பனா? அன்றி வானக் கொள்கையால் நிறைந்த கோனா? 
      நம்பிடா முறையை எல்லாம் நவில்கிறா னாமே? என்றார்.			15
       
      இறைவன் ஒருவன் என்று கூறலாமா?
       
      இறையவன் ஒருவன் என்றே இயம்புதல் மடமை; நந்தம் 
      மறையினை நம்பல் மக்கா மக்களின் கடமை; அன்பு 
      நிறை மனம் நீங்கி வாழ நினைப்பதா அறிவுடைமை 
      முறையிலா நெறியை நாடல் முழுமையும் கொடுமை” என்றார்.		16
       
      முகம்மது செய்வது சரியா?
       
      கடவுளின் தூதன் என்று காட்டிட அற்பு தங்கள் 
      உடனுடன் செய்து காட்டி உரையை மெய்ப்பித்தல் வேண்டும் 
      கடமையாம் இதனை விட்டுக் கருத்திலாச் சொல் பிதற்றி 
      மடமையில் நிற்கின்றானாம் மகம்மது சரியா? என்றார்.			17
       
   |