பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்177


ஆய்ந்தபின் முடிவு கூறுவேன்

“தன்னிலை விளக்கம் கேட்கத் தம்பியின் மகனை ஈங்கென்
முன்னிலை வரவே செய்க முழுநிலை அறிந்த பின்னர்
என்னிலை உரைப்பேன்” என்றே இயம்பிட, அபூத்தாலிப்பு
நன்னிலை நடக்க எண்ணி நபியாரை அழைப்பித்தாரே! 18

போய் முகம்மதுவை அழைத்து வா

அண்ணலார் அபூத்தாலிப்பு ஓர் அன்பனை அழைத்து “நீ போய்
விண்ணுளான் தூதர் ஆன வீரரைக் கொணர்வாய்” என்றார்.
பண்ணுளார் உரையைக் கேட்டுப் பணிந்தவன் உடனே வானக்
கண்ணுளார் ஆன அன்புக் கனிமுகம் மதுவைக் கண்டான்; 19

அரசர் தங்களை அழைக்கிறார்

மயக்குநோய் தீர்க்க வந்த மருந்தென நோய்மண் தன்னை
இயக்கும் நன்னெறிவான் தூத! இனியவர் கபீபு தாமும்
நயக்கும் நம் அபூத்தாலிப்பும் நல்கிய ஆணை கேட்டுத்
தயக்கமாய் இருந்தும் கூடத் தங்களை அழைக்க வந்தேன். 20

கதீசா அம்மையிடம் நடந்ததைக் கூறினார்

“அவையுளே இருக்கின் றார்கள் அன்புடன் வருக” என்றான்
நவையிலா நல்லோன் சொன்ன நயமொழி கேட்டுப் பெம்மான்
சுவையுடன் கதீசா அம்மை சுடர்செவி கொள்ளும் வண்ணம்
எவைஎவை நடந்தவையோ இயம்பினார் அவற்றை எல்லாம். 21

கதீசா இறைவன்பால் முறையிட்டார்

அம்மையார் இச்சொல் கேட்ட அளவிலே நடுங்கிச் சோர்ந்து
வெம்மையான் அபூசகுல்போல் வேங்கையர் சூழும் மன்றில்
நம்மையாள் பெருமான்தம்மை நண்ணிட விடுக்கலாமோ?
எம்மையாள் இறைவா! இந்த இடுக்கணைத் தவிர்ப்பாய்” என்றார். 22

துணைவியாரை நபிபெருமான் தேற்றினார்

வருந்திய அம்மை யாரை வள்ளலார் நோக்கிப் “பண்பு
பொருந்திய துணையே! இந்தப் புவியிலே இறைவன் காவல்
மருந்தினைப் போலக் காக்கும் மயக்கமேன்? மனிதர் என்றும்
வருந்தீய வற்றைக்கூட வருந்தாமல் ஏற்க வேண்டும். 23