ஏமாந்துவிட வேண்டாம் மன்னா!
“வருகின்றான் மன்னா! கெட்ட வஞ்சகன் மாயச் செய்கை
தருகின்ற வற்றைக் கண்டு தடுமாற்றம் அடைய வேண்டாம்;
பொருகின்ற பகையைக் கூடப் புரட்டுப்பொய் காட்டி வெல்வான்
விரிகின்ற வஞ்சகத்தை வெட்டிச் சாய்த் திடுங்கள்” என்றான். 30
அபூசகுல் குற்றம் சாட்டினான்
“பேசுதல் எல்லாம் பொய்யே பிதற்றுதல் என்ப தேமெய்
மாசுகள் மனத்துள்ளேதான் மகம்மதோ இனப்பகைதான்
கூசுதல் இல்லா நாவோன் கொடுக்கிலாக்குறைதான்” என்றே
தூசுகள் கிளறி விட்டான் தொடர் அபூசகுல் தீயோனே! 31
“கரும்பைக் கசப்பு” என்று சொன்னான்
கன்னலைக் கசப்ப தென்றான்; கருணையைக் கயமை என்றான்;
நன்னலம் செயும்மருந்தை நஞ்சென மாற்றிச் சொன்னான்;
தன்னலம் இல்லாதாரைத் தரையினை ஏய்க்க வந்தான்
என்னலும் அபூசகுல்தன் இழிந்தபுன் சொல்லைக் கேட்டு; 32
அவரவர் இயல்பு மாறாது
மன்னிய கொள்கை வாய்ந்த மன்னவர் கபீபு தம்சீர்ப்
பொன்னிகர் கருத்துச் சொன்னார் “புவியிலே நல்லார், தீயர்
என்பவர் தங்கள் கொள்கை என்றுமே மாற மாட்டார்
கன்னலோ கசப்பதில்லை கனிவேம்போ இனிப்பதில்லை. 33
நன்மை விளங்கும் தீமை விலகும்
பொய்உடன் மாயும்; வாய்மை புகழ்வர நிலைக்கும்; இந்த
மெய்யுரை தன்னை மேலோர் மீச்சிறு பொழுதில் காண்பர்
செய்யும்ஏ மாற்று வித்தைச் சிறுமைகள் வெளிச்ச மாகும்;
மெய்தவத் தூதர் செய்யும் மேன்மையோ நிலைக்கும்” என்றார். 34
அபூத்தாலிப்பு நபியார் பெருமை கூறினார்.
இன்னுரை செவியில் கேட்ட எழிலவர் அபூத்தாலிப்பு
பொன்னுறை மனத்தார் அன்பும் பொறுமையும் நிறை வளத்தார்
தன்னுரை செய்கை நெஞ்சில் தன்னலம் இல்லார்” என்று
பொன்னுரைகல் போல் ஆங்கே புகன்றனர் பெருமான் சீரே; 35
|