|
யானே இவரை வளர்த்தவன்
அன்று தொட் டிந்நாள் ஆக அன்பரை வளர்த்தோன் யானே;
கொன்று போட் டாலும் பொய்யே கூறாத இயல்பும் கொண்டார்;
என்றுமே மந்திரங்கள் இயற்றுவோர் பக்கம் சேரார்;
நன்றியில் தீயா ரோடும் நட்பிலார்; பழிகள் கூறார்; 36
நல்லவர் என்பதை நேரில் பாருங்கள்
நன்னெறி ஒன்றை அன்றி நாண்தரும் நெறியை நாடார்;
புன்னெறி செல்வாரையும் பொதிந்து பொன் போலக் காப்பார்;
வெல்நெறி உரைக்க வந்தார்; விளம்பும்என் உரையின் வாய்மை
முன்னறி வீர்கள் மன்னா! முகம்மது முகம்கண்டு என்றார்; 37
முகம்மது வருகையில் அவர் உடல் மணம் தெரிவித்தது
மழைவரும் முன்னே வான மணிமுகில் வருதல் போலப்
பிழைவரும் பேச்சாளர்கள் பெருகிய மன்றம் நோக்கி
உழைவரும் முன்னே நல்லார் உடல்மணம் உணர்ந்தார் மன்றில்
அழைப்பினை ஏற்று வந்த அகம்மதின் வருகை யாலே! 38
மன்னர் எதிர்கொண்டு அழைத்தார்
மன்னரே இறங்கிச் சென்று மகம்மது தம்மைக் கண்டே
“இன்னலைத் தீர்க்க வந்த ஏந்தலே! வரவேற் கின்றேன்;
என்னவை சிறக்க வந்தீர்” எனப்பல வாறு வாழ்த்தி
அண்ணலை அருகமர்த்தி அன்புரை யாடி னாரே. 39
கயவர் கலங்கினர்
கலங்கினர் கயவர் மன்னர் காட்டிய மதிப்பைக் கண்டே;
நலம்கிளர் கின்ற அண்ணல் நறுமெய்யின் தோற்றம் கண்டார்
புலன்கிளர்ந் தெழவே தங்கள் பொய்ந்நிலை மாறி மாறி
வலம்கெழு மனத்தர் ஆகி வாய்மையே உரைசெய் தாரே! 40
இவரே விண்ணவன் தூதர்
மெய்யிலே இருந்து தோன்றும் மிகுநறு மணமும் அன்னார்
கையிலே காணுகின்ற கார்முகில் வளமும், வண்ண
மையிலே தீட்டி வைத்த மணிவிழி ஒளியும், கண்டு
மெய்யுளார் இவரே வந்த விண்தூதர் என்றார் சில்லோர்; 41
|