பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்181


அனைவரும் நபிகளாரை வணங்கினார்

கருநிழல் அமையாத் தோற்றம் கால்பதியா முன்னேற்றம்
ஒருநிழல் குடைபிடித்தே உடன்வரும் முகிலின் ஈட்டம்
தருநிழல் நபிநல்லாரின் தெளிவினைக் கண்டோர் பக்கம்
வருநிழல் இவரே என்று வாய்மையின் புகழைச் சொன்னார்; 42

நல்லவர்கள் வாழ்த்தினர்

“நல்லவர் இவரே; போற்றும் நபியவர் இவரே; காக்க
வல்லவர் இவரே; வாய்மை வழங்குதல் இவரே” என்று
புல்லவர் பொய்மை நாடிப் போனவர் எல்லாம் மாறி
உள்ளவர் ஒளியின் முன்னர் ஒன்றினார் நல்லோர் ஆனார்; 43

அபூசகுலைப் பழித்தனர்

“பழிகூறி மடல்விடுத்த பகைமன அபூசகுல்தன்
வழிநாடி வந்தோம்; ஆனால் வாய்மையார் நிலையைக் கண்டால்
விழிவழி தூய்மை ஆனோம்; விதிவலி வலிதே” என்று
கழிமகிழ் வெய்தி னார்கள் கண்முன்னர் நபியைக் கண்டோர் 44

மக்கள் பரிவுற்று நெகிழ்ந்தனர்

கண்பெற்ற பயனைப் பெற்றோம் கடவுளின் தூத ராலே
மண்பெற்ற பயனைக் கண்டோம் மகம்மது வருகையாலே;
விண்பெற்ற பேற்றை இந்த வியன்மண்ணும் பெற்ற தென்றே
பண்பற்ற மக்கள் எல்லாம் பரிவுற்று நெகிழ்ந்து போனார். 45

முகம்மதுவைப் பகைப்பவர் தங்களையே பகைப்பார்

மகம்மதைப் பகைப்பவர்கள் மண்ணையே பகைப்பவர்கள்
அகம்மதைப் பகைப்பவர்கள் ஆண்டவன் பகைவர் தங்கள்
முகமதைப் பகைப்பவர்கள் முகம்மதைப் பகைப்பவர்கள்
அகம்மதைப் பகைப்பார் தங்கள் அகமதன் பகைஎன் றாரே. 46

மொழிவது என் கடமை

உற்றவர் எல்லாம் தங்கள் உளமாறிப் புகன்றிருக்க
நற்றவக் கபீபு மன்னர் நறுமண மணியை நோக்கிக்
கற்றவர் குலமாம் ஆசிம் கவின்குலச் சுடரே! உம்மை
முற்றும்நான் அறிந்திருந்தும் மொழிந்திடும் கடமை உற்றேன். 47