பக்கம் எண் :

182துரை-மாலிறையன்

பழைய மரபை மீறலாமா?

பெற்றவர் உற்றோர் மற்றோர் பேணிய நெறியையே பின்
பற்றுதல் கடமையாகும் பற்றினை மாற்றிக் கொண்டே
“உற்றுஓர் உருவில்லாதான் ஒருவனே” என்று கூறி
மற்றுமோர் நெறியால் மண்ணின் மக்களை மயக்கலாமா? 48

இணக்கமாய் வாழவேண்டும் அல்லவா?

“எனக்குப்பின் நபிகள் வாரார்” என்முன்னே வானோர் தோன்றி
“எனக்குத்தான் இசுலாம்மூல எழில்மணி மந்திரஞ் சொல்
வணக்கத்தின் முறையும் சொன்னார்” எனக்கூறி வருகின்றீராம்
இணக்கத்தால் வாழ்ந்திடாமல் இனத்தொடும் பகைக்கலாமோ? 49

நபிகள் என்றால் புதுமை செய்ய வேண்டும்

அன்புடை யவரே! நீரும் அருநபி என்பீ ரானால்
முன்பொரு புதுமை யேனும் முறையொடும் செய்தல் வேண்டும்;
பண்புறு நபிகள் முன்னாள் பற்பல புதுமை செய்த
பின்புதான் மக்கள் நம்பிப் பேரன்பு செய்தார் அன்றோ? 50

நூகு இபுராகீம் புதுமை செய்தார்கள்

அரியவர் “நூகு” என்னும் அருள்நபி அந்நாள் வந்த
பெரியதோர் வெள்ளம் தன்னில் பேருயிர் காத்தார்; பின்னாள்
எரிவதோர் தீப்பிழம்பை எதிரினில் குளிரச் செய்து
விரிஒளி நபிஇப் றாகீம் விளக்கினார் நபியார் மாண்பே. 51

மூசா தாவீது புதுமை செய்தனர்

கொடியவன் பிருவூன் காணக் கோதிலார் நபியார் மூசா
தடியைஓர் பாம்பாய் மாற்றித் தந்நிலை தெரிவித்தார்கள்
நெடியதா வூதுநல்லார் நேரினில் எஃகை நீர்த்து
வடியும்ஓர் மெழுகாய் மாற்றி வரத்தினை மெய்ப்பித்தார்கள்; 52

ஈசா புதுமை செய்தார்

பண்டைநாள் ஆற்றில் சிக்கிப் பட்டதோர் மன்னவன்தன்
மண்டைஓட்டினையே மாற்றி மன்னவன் ஆக்கி வைக்க
அண்டையோர் கண்டு கண்டே அருவியப் படையச் செய்தார்;
தொண்டிலே சிறந்த ஈசா தூயவர் அறிவீர் அன்றோ? 53