பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்183


அவ்வாறே நீங்களும் செய்து காட்டுக

செந்நெறி சொன்னார் எல்லாம் செய்தனர் அற்புதங்கள்
அந்நெறி கூறும் நீவிர் அற்புதம் செய்வீராகில்
எந்நெறி உரைக்கின்றீரோ எழில்நெறி யாகும் என்னும்
இந்நெறி எடுத்துச் சொன்ன இனியராம் கபீபு முன்னர்; 54

எவ்வகை அற்புதம் வேண்டும்?

“எவ்வகை அற்புதத்தை இயற்றிட வேண்டும் என்று
செவ்வியர் நினைக்கின்றீரோ செப்புக” என்றார் நல்லோர்
வெவ்வியல் இல்லா வேந்தர் விளம்பினார் “ஐய! வெய்யோன்
செவ்வியல் நீங்கி மேலைத் திசையினில் வீழ்ந்த பின்னர்; 55

அமாவாசையில் நிலாவை வரச் செய்க

உயர்அபூ குபைசென் கின்ற ஒரு குன்றின் முகட்டில் நின்று
நயமுற மண்ணில் தோன்றும் நள்ளிருள் கார்உ வாவில்
வியன்முழுத் திங்கள்தன்னை விண்ணினில் வரவேசெய்து(இங்கு)
இயல்பொடு ககுபா மீதில் எழில்தரக் காணச் செய்வீர்! 56

திங்கள் தொழுகை செய்ய வேண்டும்

பின்னரும் முழுமைத்திங்கள் பேரிறைக் ககுபா இல்லம்
தன்னையே ஏழு சுற்றுத் தகுதியாய்ச் சுற்றி வந்து
முன்னமே உள்புகுந்து முறைப்படி தொழுகை செய்து
தன்னிகர் இன்றி நிற்கும் தங்களை அடைய வேண்டும். 57

திங்கள் தங்களிடம் பேச வேண்டும்

தங்களை அடையும் முன்பே தரையினில் நிற்கும் மக்கள்
தங்களின் நடுவில் காணத் தானது நடக்க வேண்டும்
மங்காத ஒளி உண்டாக்கி மலையுச்சி வந்தடைந்து
தங்கள்முன் நின்று கொண்டு தனி உரை செய்தல் வேண்டும் 58

இரண்டாகப் பிளவுபட வேண்டும்

“ஒருவனே இறைவன் அந்த ஒருவனின் தூதர் இந்தப்
பெருமானே” என்று கூறிப் பெருவட்ட நிலாப் பிளந்தே
இரு அரை வட்டமாகி இரண்டனுள் ஒன்று தங்கள்
அருஞ்சட்டையுள் புகுந்தே அருட்கையில் வரவே வேண்டும். 59