பக்கம் எண் :

184துரை-மாலிறையன்

மீண்டும் ஒன்றாகச் சேர வேண்டும்

துண்டொன்று வான்மேல்போகத் தொடர்ந்திடும் மற்றும் ஒன்று
மண்டலைக் கடலில் மூழ்கி மலரென வானில் ஏகிக்
கொண்டவை இரண்டும் ஒன்று கூடியே ஒளிர வேண்டும்
கண்டவர் அதனைக் கண்டு களித்திடும் அந்தப் போழ்தில்; 60

கலிமா ஓத வேண்டும்

யாவரும் கேட்கு மாறு “யா அல்லா” என்று கூறி
ஆவலால் இசுலாம் மூல அகம்கவர் மந்திரத்தை
நாவினால் பேசல் போல நன்குரைத் திடவே வேண்டும்
தேவை இச்சான்றே என்று தெரிவித்தார் கபீபு மன்னர். 61

இவை எவ்வாறு நடக்கும்? என்றான் அபூசகுல்

அல்லாவின் செயலால் எல்லா அருமையும் நிகழும் என்றே
வல்லாரும் எண்ணிக் கொண்டு வந்தனர்; எல்லாம் கண்ட
பொல்லாத அபூசகுல் தான் பொருமிய உளத்தை ஏந்திப்
பல்லாரும் பார்த்துக் கிண்டல் பண்ணுவார் இவனை என்றே. 62

திங்கள் பணியாரமா என்ன?

எண்ணியும்; திங்கள் தன்னை எவ்வகை அழைப்பான் எந்தப்
புண்ணியம் செய்தார் கூடப் புவியிலே இதைச் செய் வாரோ?
தண்ணிய நிலவை இந்தத் தரையினில் வரச் செய்வானாம்
பண்ணிய உணவா திங்கள் பாதியாய்ப் பிரிக்க? என்றே; 63

நபிபெருமான் எள்ளியோரைப் பொருட்படுத்தவில்லை

பகடிதான் செய்த வாறு பகர்ந்ததைப் பெருமான் கேட்டும்
அகம்நிறை இறைவன் மாண்பை அடிக்கடி எண்ணிக் கொண்டே
தகைமிகும் கதீசா அம்மை தம்மையே சந்தித் தற்கு
மிகமிக ஆர்வத் தோடு மேவினார் மனை இடத்தே! 64

இறைவன் முன் மன்றாடினார்

துணைவியார் இடத்தே மன்றில் தொடர் வினையாவும் சொன்னார்;
இணையிலார் யாவும் கேட்டார் இறைவனைத் தொழுதவாறே
வினைநலப் பெருமானார் தாம் வெற்றியை நல்க வேண்டி
முனைவனாம் இறைவன் முன்னே மூழ்கினார் தொழுகையாலே! 65