பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்185


செபுறயீல் தோன்றி உரைத்தார்

தொழுகைதான் முடிந்த பின்னர்த் தோன்றிய செபுறயீல் ஓர்
வழுவிலா உளத்தீர்! அன்பு வானிறை சலாம் உரைத்தான்;
விழுமிய நிலாமுன் வந்து வேண்டின எலாம் விளைத்தல்
பழுதின்றி நடக்கும் என்றும் பகர்ந்திடச் சொன்னான்” என்றார். 66

அபூத்தாலிப்பின் எண்ணம்

வானவர் போன பின்னர் வள்ளலார் மகிழ்ந்திருந்தார்
தேனவர் அபூத்தாலிப்பு தேயத்தின் அரசர் முன்னர்
ஆனவை அனைத்தும் கேட்டு(அங்கு) அமைதியாய் இருந்தும் அந்தப்
பானிலா வருதல் பற்றிப் பற்பல நினைத்திருந்தார்; 67

பாலையில் ஊற்றும், பகைவர்க்குக் கையும் உண்டாக்கினார்

பாலையில் ஊற்றுண்டாக்கிப் பருகிடத் தண்ணீர் தந்தார்
ஆளையே தின்ற வேங்கை அதனிடம் பேசி நின்றார்
கோலமாம் பாம்பை வெட்டிக் கொன்றனர்; கல்லைத் தள்ளி
மாளவே செயவந்தானை மன்னித்துக் கைகள் தந்தார்; 68

அபூத்தாலிப்பு முன்சுவர் பேசியது

“இயல்பிலா நாளில் வானத்(து) எழில்மதி தோன்றச் செய்ய
முயலுவேன்” என்று கூறி முகம்மது முன்வந்தாரே;
“இயலுமா?” எனும் ஐயத்தால் ஏங்கிய அபூத்தாலிப்போ
அயலினில் சுவரைக் கணடார்; அச்சுவர் பேசக் கேட்டார்; 69

கலங்காதீர் நிலவு தோன்றும்

“கலங்காதீர் அபூத்தாலிப்பே! கடவுளின் துணைஇங் குண்டு
நிலங்காண நிலவு தோன்றும்; நேர்வந்து சான்று கூறும்;
விளங்காமல் போவார் தெய்வம் வெறுத்தவர்” என்று கூறிப்
புலன்காண இயலா வானோர் புகன்றுபின் மறைந்து போனார். 70

இருவரும் பரிமாறிக் கொண்டனர்

அருஞ்சுவர் பேசக் கேட்ட அபூத்தாலிப்பு அகம் வியந்து
பெருஞ்சுடர் நபியைப் பார்த்துப் பெருமையாய்க் கூற அன்னார்
தருஞ்சுவைச் செய்தி கேட்டுத் தகுமுகம்மதுவும், வானோர்
நெருங்கியே உரைத்த வெல்லாம் நெகிழவே சொன்னார் ஆங்கே. 71