பக்கம் எண் :

186துரை-மாலிறையன்

முகம்மது மலை உச்சி அடைந்தார்

அடுத்த கார் உவாநன்னாளில் அன்பர்கள் எவரும் சூழ
உடுத்தசீர் நபியார் தங்கள் உயர்ககுபாவில் சென்றே
எடுத்தகை நீட்டி வேண்டி எழிற்புவி தலையால் தொட்டுத்
தொடுத்த நல் தொழுகை செய்து தொடர்மலை உச்சி போனார்; 72

மக்களும் குழுமினர்

அண்ணலார் மலைக்குப் போன அருஞ்செய்தி கேட்ட மக்கள்
தண்ணிய நிலவைக் காணும் தக்கபே ரார்வம் கொண்டார்
“விண்ணவர் அருளைப் பெற்று வினைநலம் புரியப் போவார்
வண்ணத்தைக் காண்போம்” என்று வந்தவர் குவிந்தார் ஆங்கே. 73

பகைவர்களும் வந்தனர்

மன்னவர் வந்தார்; அந்த மன்னரின் அவையைச் சூழும்
பின்னவர் வந்தார்; மக்காப் பிள்ளைகள் வந்தார் அன்புக்
கன்னியர் வந்தார்; வல்ல காளையர் வந்தார்; கொள்கை
மன்னிய நல்லோர் வந்தார்; மாற்றாரும் வந்தார் ஆங்கே. 74

திங்கள் வந்தால் நாம் தோற்று விடுவோமே

கண்ணியம் இன்றி உள்ளம் கலங்கிய அபூசகுல் தன்
திண்ணிய கையாள் மக்கள் திகைப்புற வந்தார் மன்னன்
எண்ணிய படியே திங்கள் எதிர்வரின் தோற்போம் என்றே
கண்ணிலே கலக்கம் கொண்டு கண்டனர் எதிர் சாராரே! 75

சூரியன் மறைந்தான்

ஒளியவர் உச்சி மீதில் ஓங்குவார் என மருண்டு
வெளியில் நாம் இருப்ப தாலே விளைபயன் இல்லை என்றே
ஒளிபவன் போல மேலை ஒலிக்கடல் உள் புகுந்தான்
வெளி எலாம் மேய்ந்து வந்த வெய்யவன் கதிர்மறைத்தே. 76

திசை தெரியாத இருள் சூழ்ந்தது

பசியதா வரங்கள் சூழ்ந்த பசுமலை முற்றும் மாறி
அசையும் சீர்த் தலைகளாலே அருங்கருப் பாயிற் றந்நாள்
இசையவே கார் உவாவின் இருட்டுடன் ஒன்று சேர்ந்து
திசைதெரி யாதிருந்தும் தெரிந்தனர் ஒளியி னாரே! 77