மன்னர் மதியினை அழைக்கச் சொன்னார்
அருகினில் நின்ற மன்னர் அகம்மதை நோக்கி, “இன்னே
வருகெனக் கூறி அந்த மதியினை அழைப்பீர்” என்றார்;
பெருகிய பற்றுக் கொண்ட பெருமானார் வானைப் பற்றிப்
பருகிய ஆர்வினார்போல் பணிந்தெழுந்து இறைஞ்சினாரே. 78
தலைக்கு மேல் நிலா எழுந்தது
வேண்டுதல் முற்றும் கேட்ட விண்ணிறை யான வள்ளல்
தூண்டுதல் துளக்க மாகத் தோற்றிய இருளில் ஓர்நல்
கூண்டுபோல் திங்கள் தோன்றிக் கொழுகொழுவென வளர்ந்து
வேண்டுவோர் தலைநேர் வந்து விளைநிலா ஒளிரக் கண்டார். 79
பறவைகள் திகைத்தன
பறவைகள் விலங்கினங்கள் பளிச்செனத் திங்கள் தோன்ற
இரவினைப் பகலாய் எண்ணி இயங்கவே வந்த போதில்
இரவினில் திரியும் புட்கள் இரைதேட இயல வில்லை
விரைவினில் வெய்யோன் வந்த விளைவினை வெறுத்த வாலோ; 80
சொல்லியபடியே நிலா செய்தது
மன்னவர் என்ன என்ன மதிசெய வேண்டி னாரோ
அன்னவை எல்லாம் செய்தே அம்மதி உலாவிச் செல்லப்
புன்னவைக் கூட்டத்தார்கள் புகழெலாம் மாய்ந்து போகக்
கன்னல்போல் மொழி எடுத்துக் கலைமதி சான்று ரைத்தே; 81
நிலா அளித்த சான்று
“இறைவனின் தூதாய் வந்த இறுதியார் நபியே! நீவிர்
கறையிலா நெறியைக் காட்டக் கவின்புவி வந்தீர்” என்று
நிறைமொழி பேசி விட்டு நெடியவர் வேண்டி வைத்த
முறையினில் எல்லாம் செய்து முழுநிலா மறைந்த தாங்கே! 82
மக்கள் வியந்தனர்
வியப்பினைக் கண்ட வர்கள் விழிகளை இமைக்க வில்லை
முயற்சியார் புகழைப் பேச முயன்றோர்வாய் மூடவில்லை
அயற்பகை வர்கள் எல்லாம் அறியாமை போக்கி நின்றார்
இயற்கையை மீறிச் செய்த இனியவர் செயலி னாலே! 83
|