|
சம்சம் நீர் தெளித்து வேண்டினார்
நல்லோர் வானோர் உரைத்தபடி நன்றாய்ச் சுற்றிக் கம்பளியால்
வல்லார் வைத்தார் சம்சம்நீர் வகையாய்த் தெளித்த பின்னாங்கே
பல்லார் காணக் கடவுளவன் பற்றில் மூழ்கி அருஞ்சொற்கள்
சொல்வார் ஆனார் முகம்மது கோன்சுற்றி நின்றோர் வியந்திடவே 10
பெண்ணுருவம் வந்தது
இறைவன் முன்னே வேண்டியதை இயற்றித் தந்தான்; தசைக்கட்டி
நிறைவாய் மாறிப் பெண்ணுருவாய் நெளிந்து நாணி நின்றவுடன்
மறைவாய் மொழியார் பெருமானார் மனமும் மகிழ்வால் நிரம்பியதே
முறையிட் டாங்கே நின்றவராம் முதிய மன்னர் மகிழ்ந்தாரே! 11
வந்த பெண் கலிமா ஓதினாள்
எழுந்த உடனே இயல்போடும்
இசுலாம் மூலமந்திரத்தை
மொழிந்து கடவுள் போற்றினளே
முழுமை பெற்ற திங்கள்போல்
பொழிந்த ஒளியின் முகத் தினையும்
புனிதம் போற்றும் உளத்தினையும்
வழிந்த முகப்பால் வளர்ச்சியையும்
வாய்த்த மகளாம் பெண்ணவளே! 12
அப்பெண்ணின் அழகை எந்த
உவமையாலும் விளக்க இயலாது
கரிய கூந்தல் கார்முகிலின்
கவினைக் கூட வறிதாக்கும்
தெரியும் சின்ன கருவிழிகள்
தெளிவாய் மணிபோல் ஒளியாகும்
விரியும் புருவ நெறி நுதலும்
வில்லும் நிலவும் போலாகும்
அரிய பெண்ணின் கவினெல்லாம்
அறைந்தால் உவமை இல்லாகும். 13
|