| 
       கபீபு மன்னர் மனம் மகிழ்ந்தார்
       
      தசைத்திரள் அதுதான் தகுநபி மாண்பால்
       
      தாழ்குழல் மங்கையாய் மிளிரத்
       
      திசைதொறும் தெய்வத் திருச்செயல் விளங்கித்
       
      தெளிவுற மாந்தர்கள் கேட்டு
       
      நசைகொடு வான நன்னெறித் தூதர்
       
      நறும்புகழ் தனை இசைத்தாங்கே
       
      இசையவன் கபீபா இதயமே மகிழ
       
      எழிற்புகழ் நலத்தினில் கலந்தான்.					14
       
      பெண்ணாக மாறியவள் தந்தையுடன் போனாள்
       
      புதியநன் மயிலாள் பொன்முகம் மதுவின்
       
      பொலிந்திடு திருவடி வணங்கி
       
      மதியமும் தோற்கும் மலர்முகம் காட்டி
       
      மன்னவர் தம்முடன் இருக்கப்
       
      புதிரெனத் தோன்றிப் பொலிபவள் அவள்தன்
       
      புதுநலம் கண்டனர் வியக்க
       
      எதிர்வரும் எழிலோ எனமயங்கிடவே
       
      ஏகினாள் தந்தைபின் னவளே.						15
       
      கபீபு மன்னர் கலீமா ஓதினார்
       
      ஆண்டுபல் லாண்டாய் அருந்துயர் கொண்ட
       
      அரசராம் கபீபு உயர் கோமான்
       
      மாண்டதன் மகளை மீண்டுகண்ட தனால்
       
      மிகுமகிழ் வடைந்ததன் பின்னர்
       
      ஆண்டவன் அருளை அகந்தனில் பொருத்தி
       
      அருஞ்சுடர் மூலமந்திரத்தை
       
      மீண்டதம் அன்பு மகளொடும் கூறி
       
      மிளிர்கஇசு லாமென மலர்ந்தார்.						16
       
   |