பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்193


மன்னனைப் பின்பற்றிப் பலர் இசுலாம் தழுவினர்

அரசன்எவ் வழியோ அவ்வழிக் குடிகள்

ஆவரே எனும்முது மொழி போல்

பரவிய கபீபு பண்பினைப் புகழ்ந்து

பற்பலர் இணைந்தனர் இசுலாம்

உரைவலி மிகுந்த உயர்திருக் குர்ஆன்

உணர்வொடும் ஓதிய பின்னர்ப்

புரவி மீதேறிப் புரவலன் பின்னே

போனது மறவர்தம் படையே! 17

நபிபெருமானைப் பகைத்தோர் நரகு அடைவர்

விரைந்திடும் மன்னன் விழிஎதிர் முன்னே

வெள்கிய அபூசகுல் வந்தான்

நிரைபடை உடையோர் நெகிழ்மனம் கொண்டு

நேரிய அறிவுரை புகன்றார்

மறைத்திருக் குர்ஆன் மலர்ந்தகோ மானை

மனத்தினால் செயலினால் உரையால்

குறைத்தனர் எவரே ஆகிலும் அன்னார்

கொடியதாம் நரகிடை வீழ்வார். 18

நபிபெருமானின் பெருமையைக் கண்டேன்

புதுமைகள் செய்த புகழ்முகம் மதுவின்

புண்ணியம் உரைப்பதும் பெரிதே

பொதுநலம் புரியும் புகழ்நபி பெருமை

போற்றலும் மொழிதலும் நலமே

இதுவரை யானும் இதை அறியாதேன்

இன்று நான் கண்டனன் என்றே

புதுமறைப் பெருமை புகன்றவ ராகப்

போயினார் கபீபுமன் னவரே! 19