|
அரசன் அனுப்பிய பரிசை மறிப்பவர் யார்?
குதித்திடும் கயவன் கொடுஞ்செயல் கண்டோர்
கோமகனார் நபிக் குரைத்தார்
மதிநிகர் முகத்தார் மகம்மது நபியார்
மக்களின் உரைசெவி யுற்று
முதிர்சுவை அன்பர் முறையொடும் சூழ
முறையிலா அபூசகுல் முன்போய்
மதிப்புற மன்னர் அனுப்பிவைத் ததனை
மறிப்பவர் எவ” ரெனக் கேட்டார். 26
இப்பரிசுகள் எனக்கே உரியன என்றான் அபூசகுல்
பொறுப்புடன் அழைத்தேன் பொருட்செலவெல்லாம்
புரவலன் தனக்கெனச் செய்தேன்
விருப்புடன் இந்த வியன்பொருள் எல்லாம்
விரைந்தனன் அனுப்பி வைத்துள்ளான்
மறுப்பது தானும் மயக்குதல் தானும்
மகம்மது நீசெயும் செயலே
இருப்பவை எல்லாம் என்பொருள்” என்றான்
எப்பொருள் தனக்குமே ஒவ்வான். 27
வீரர்களையே கேட்போமே என்றனர்
ஒட்டிய சான்றோர் உறுநிலை கண்டார்
உரைத்தனர் அபூசகுல் இடமே;
“வெட்டியாய் நீர்ஏன் வாதிடு கின்றீர்?
வீரர்கள் பொருளுடன் வந்தார்
சுட்டியே காட்டிச் சொல்லிடச் சொல்வோம்
சொல்லுவார் எவர்பொருள்” என்றே
எட்டியே நிற்பாய் எனப் பலர்கூற
எலாரையும் நெருப்பென முறைத்தான். 28
|