பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்197


ஒட்டகங்களைச் சான்று கூற வைக்கிறேன்

உரியவர் அல்லார் உரைப்பதை விடவும்

ஒட்டகம் உரைத்திடச் செய்வேன்

பெரியவர் நீங்கள் பிரிந்துடன் போங்கள்

பேசிடும் ஒட்டகம் நாளை

அரியவாம் பொருள்கள் அனைத்தும் என்றனக்கே

அனுப்பியவை எனச் சொல்லும்

கரியையே பூசிக் கவின் முகம்மதுவைக்

கலக்குவேன்” என்றனன் கொடியோன். 29

அபூசகுல் ஆலயத்தில் வேண்டினான்

அற்றைநாள் உடனே அபூசகுல் வணங்கும்

ஆலயம் தன்னுளே புகுந்து

பற்றினால் மலரும் பற்பல புகையும்

பலபட உருச்சிலைக் களித்தே

“உற்றஅப் பொருள்பொன் ஒளிர்மணிக்கு எல்லாம்

உரியவன் யான்”எனும் சான்றை

நற்றுணை ஆக நல்ல ஒட்டகங்கள்

நவின்றிட வேண்டினன் பொல்லான். 30

ஒட்டகங்களைப் போகுமாறு கூறினான்

முந்தைநாள் சொன்ன முறையினில் மக்கள்

மொய்த்தனர் ஒட்டகம் தமையே

சிந்தனைத் தீயான் செருக்குடன் வந்தான்

செம்மலும் அவ்விடம் போந்தார்

முந்திநான் கேட்பேன் மொழிந்திடும் விலங்கு

முழுவதும் அடைகுவேன் என்றே

வந்துநேர் நின்று வாயிலா விலங்கை

வருத்தினான் “பேசுபேசு” என்றே. 31