|
ஒட்டகங்கள் அசைகூடப் போடவில்லை
அசையிடும் விலங்கும் அபூசகுல் தன்னால்
அசைபோடவும் மறுத்து இருக்கப்
பசையிலா நெஞ்சன் பலமுறை “சான்று
பகர்க ஒட்டகம்!” எனக்கெஞ்சத்
தசையிலாப் பொருள்போல் தாம்அசைந் திடாமல்
தனித்தனி அவைஎலாம் இருக்கத்
திசைதொறும் நின்ற திருநகர்ச் சான்றோர்
திகைத்தவன் அபூசகுல் விலக்கி; 32
முகமது நபி ஒட்டகங்களைக் கேட்டார்
“தனித்திறன் மிக்க தகும் முகம்மதுவே!
தாங்களும் செவ்விதழ் திறந்தே
இனித்திடச் சான்றை இயம்புக என்றே
எமக்குமுன் கேட்கவே” என்றார்.
பனித்திரு மொழியார் பரிவுடன் நோக்கிப்
படர்ந்திடும் ஒட்டகக் குலமே!
புனித்த இப்பொருட்குப் பொறுப்பினர் யாவர்?
புகலுக என்றனர் ஆங்கே! 33
ஒட்டகங்கள் சான்று கூறின
கல்லெனக் கிடந்து கவிழ்ந்த ஒட்டகங்கள்
கடவுளின் தூதுவர் கேட்க
ஒல்லென எழுந்தும் உடல்தனை முரித்தும்
ஓங்கெழில் கழுத்தினை நிமிர்த்திப்
பல்லினைக் காட்டிப் பரிவினைக் காட்டிப்
பகர்சுவை அரபிய மொழியில்
வல்லினம் கலவா வகைமொழி எடுத்து
வழங்கின சான்றெனும் உரையே; 34
|