பக்கம் எண் :

200துரை-மாலிறையன்

அபூசகுல் தீமை தொடர்ந்தது

மக்கா நகரில் அக்காலம் வாழும் அல்லா நெறிபோற்றும்
தக்கார் எல்லாம் தவிப்பெய்தத் தணியா வினைசெய் அபூசகுல்தான்
செக்கைப் போலச் சுற்றி வந்து சிறுமை செய்து வருத்தியவை
மிக்க நலம்செய் முகம்மதுவின் மேன்மை நெஞ்சை வருத்தினவே! 38

தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆனான்

கொடிய பஞ்சம் நாடெங்கும் கூச்சல் குழப்பம்; கையதனில்
தடிகொள்கின்ற வல்லோர்தாம் தலைவர் என்னும் நிலைகொண்டு
பிடி கொல் என்று நல்லோரைப் பின்னால் வந்து துரத்துபவர்
குடிகொண்டிருக்கும் மக்காவில் கொள்கையற்றுத் திரிந்தனரே! 39

உருவை வணங்கியோர் தொல்லை செய்தனர்

உருவம் இல்லா உரவோனை உருவம் வைத்து மயங்கியவர்
பருவம் இல்லாப் பருவத்தில் பாய்வெள் ளம்போல் செயல்பட்டார்
ஒருவன் இறைவன் உருவில்லான் ஒளியன் என்ற முகம்மதுவின்
பெருநல் நெறியைப் பேணியவர் பெரிதும் இடுக்கண் பட்டார்கள். 40

நபிபெருமான் கடவுள் அருள் காக்கும் என்றார்

கண்ட இடத்தில் அடித்தார்கள் கட்டிப் போட்டு வதைத்தார்கள்
துண்டாய் வெட்டிப் போட்டார்கள் தூக்கிக் காலால் உதைத்தார்கள்
கண்டு கண்டு மனம் நொந்தார். கருணை வேந்தர் முகம்மதுவே
உண்டு கடவுள் அருள் என்றே உள்ளம் அமைதி கொண்டாலும்; 41

நம்மவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்போம்

பகைவர் புரியும் தீமைகளால்

பாவம் நம்மோர் கலங்குகிறார்;

புகையும் நெஞ்சப் பொறாமையினால்

புனிதர் நம்மோர் அழிகின்றார்;

தொகையாய் அவரை ஒன்றாக்கித்

தொலைவுத் தேயம் அனுப்பிடுவோம்

வகையாய் அவர்கள் வாழ்ந்தபின்னர்

வரட்டும் ஈங்கே என்றெண்ணி 42