|
உதுமான் அபிசினியா போனார்
உதுமான் அவரோடு உரையாடி
உரிய முடிவை எடுத்தார்கள்;
“புதுமாண் புடையோர் நம்மிறையைப்
பொருந்து வோரை அழைத்தேகி
முதுவான் புகழ்கொள் நல்லூராம்
முறைவாழ் அபிசினியா தன்னில்
எதுநாள் வரைக்கும் நலமுண்டோ
இருப்பீர் ஆங்கே” எனச்சொன்னார். 43
அவருடன் ருக்கையா மற்றும்
பதின்மூன்று பேர் போயினர்
அருளும் மறையும் நபிமாண்பும்
அடைந்து ஐந்தாண்டும் ஆனதன்பின்
இருளும் மக்கா நிலையதனை
எண்ணி உதுமான் நெறிநல்லார்
உருக்கையாவாம் உறுதுணையார்
ஒளிசெய் முகத்தார் பெண்மூவர்
அருமை ஆண்கள் பதின்மருடன்
அரியோர் சென்றார் அடைக்கலமே! 44
சகுபா தய்யாருடன் எண்பத்திரண்டு பேர் போனார்
அடுத்தும் ஓர் நாள் இரவினிலே அபூத்தாலிப்பின் திருமைந்தர்
அடியார் சகுபா தய்யாரும் அவரை ஒட்டிப் பல்லோரும்
கொடுமை நீங்கிச் சென்றார்கள் குழந்தை மடவார் சேர்க்காமல்
அடர்எண் பத்தி ரண்டாண்கள் ஆங்கே சென்று வாழ்ந்தார்கள். 45
அபிசீனியா மன்னவன் நல்லவன்
கருப்பர் இனத்தார் கலைக் கோமான் கருணை மிக்க உளங்கொண்டான்
விருப்பத் தோடும் வந்திருக்கும் வெற்றி வீரர் முகம்மதுவின்
கருத்தால் ஒத்த நல்லோர்க்குக் கவலை வறுமை இல்லாமல்
பெருத்த உதவி பல செய்து பேணிக் காத்தான் தன்னாட்டில்; 46
அபூசகுல் மடலும் பரிசுகளும் அனுப்பினான்
“நாட்டை விட்டுச் சென்றோர்க்கு நல்ல மதிப்பா அந்நாட்டில்?
ஏட்டை மாற்றி எழுதிடுவேன்” என்று நினைத்த அபூசகுல்வெங்
கேட்டைச் செய்யும் மனத்தோடு கிளர்ந்தெழுந்த பொறாமையால்
நீட்டி ஓலை எழுதியதை நீதி மன்னற்(கு) அனுப்பி வைத்தான்; 47
|