7. அண்ணல் அரும்புதுமை நிகழ்த்திய படலம்
மானுக்குப் பிணை நின்றார்
மண்ணகத்தார் வாழ்வுதனை மலர்த்த வந்த
மகம்மதுவின் இறையாற்றல் புகழை எல்லாம்
விண்ணகத்தார் கண்டாலும் வியக்கு மாறு
வினைசெய்ய வைத்தனனாம் இறைவன், காட்டில்
புண்ணகத்துப் பட்டுநின்ற மானுக் காகப்
புகழனைத்தும் பெற்றுநின்ற வாய்மைக் கோமான்
கண்ணகத்தார் நேர்காணப் பிணையாய் நின்ற
கனியருளை உரைப்பதுவும் பெருமை ஆமே! 1
நபி பெருமான் காட்டுக்குச் செல்லல்
வரிப்புலியும் அரிமாவும் உலவும் காட்டில்
வகைவகையாய் மானினமும் பதுங்கி மேயும்
சிரிப்பொலிசெய் பறவைகளின் இனமும் ஆங்கே
சீர்ப்பொலியும் மலர்மரங்கள் தம்மில் வாழும்
திருப்பொலியும் தெய்வத்தின் காட்சி எல்லாம்
திகழ்கின்ற அக்காட்டின் மலை ஓரத்தில்
விரிப்பு ஒளிசூழ் முகம்மதுவாம் அண்ணல் கோமான்
வியன்அரபுத் தோழர்கள் சூழச் சென்றார். 2
தோழர்களோடு பேசிச் சென்றார்
வகைவகையாய் மலர்மரங்கள் மணக்கும் காடு
வளம்பொலியும் கனிமரங்கள் சுமக்கும் காடு
புகைஎழுந்து போகவுமே வழியில் லாத
பொழில்சூழ்ந்து வளம் கொழிக்கும் அரிய காடு
தகைமிகுந்த அக்காட்டின் உள்ளே போனார்
தனிச்சிறப்பின் இசுலாத்தைத் தந்த கோமான்
அகம்மதுவைச் சூழ்ந்து வந்த தோழர்க்கெல்லாம்
அன்புரைகள் எடுத்தெடுத்து வழங்கிக் கொண்டே; 3
|