தொலைவில் ஒரு வேடன்
தொலைவினில்ஓர் வேடுவனும் தெரியக் கண்டார்
தோள்மேல்ஓர் வில்லம்பும் விரியக் கண்டார்
புலைமகனாம் வேடுவனும் அரிய தாகப்
புரிந்ததொரு முயற்சியினால் இறைச்சி வேண்டிக்
கலைமானைக் கட்டிவைத்த வலையில் மாட்டிக்
கண்ணெதிரில் நிலந்தன்னில் போட்டு வைத்தான்
தலைமகனார் அம்மானின் நிலையைக் கண்டார்
தம்முள்ளத்(து) அருள்ஒளியே பாய்ச்ச வந்தார். 4
வேடன் அருகில் ஒரு மான்
அருள்ஒளியில் மூழ்கிவிட்ட அந்த மானும்
அகம்மதுவின் வருகையினால் தென்பு கொண்டும்
இருள்அகலும் என்கின்ற எண்ண மிட்டும்
எழுகின்ற உயிர்க்கூட்டம் தம்மைப் போலப்
பொருள்வழங்கும் வள்ளல்முன் வறியோன் போலப்
பொலிவுடைய அண்ணலாரின் முகத்தை நோக்கி
அருள்வழங்கு(க) என்பதைப் போல் கிடக்கக் கண்ட
அம்மான் அப்பெண்மான்மேல் இரக்கம் கொண்டார்; 5
மான் பேசிற்று
ஐயன்முன் பேசலாம்என் றெண்ணி அந்த
அறிவுடைய பெண்மானும் கூர்ந்து நோக்கிச்
“செய்யவனின் ஆணையாலே உலகில் வந்த
செம்மையீர்! வணங்குகிறேன் உரைப்ப வெல்லாம்
மெய்யதனைக் கேட்டபின்னர் அருள்வீராயின்
மேதினியில் உயிர்பிழைத்தல் கூடும்” என்று
பெய்அமிழ்தப் பேச்சினார்முன் பேசி அந்தப்
பிழையாமான் தன்நிலையை விளக்கிற் றேயால்; 6
|