அன்புடன் வாழ்ந்தோம்
காட்டகத்தில் யானும் என்றன் துணைவி மானும்
கடுகளவும் அச்சமின்றி வாழ்ந்து வந்தோம்;
நாட்டகத்தில் இருப்பதுபோல் பொறாமை எல்லாம்
நாடும்எங்கள் காட்டகத்தில் இருப்ப தில்லை;
ஒட்டவரும் விலங்கின்கண் படாமல் நாங்கள்
ஒதுங்கிடுவோம் அதனாலே தப்பி வாழ்ந்தோம்
நாட்டவரும் எம்மைப்போல் வாழ்வ தில்லை
நடுக்கமிலை எம்வாழ்வில் என்ற போதும்; 7
சூலுற்றேன் கன்று ஈன்றேன்
கன்றீனாக் கவலையினால் உந்தப் பட்டோம்
கடவுள்தன் தூதுவனார் நீரே அன்றோ?
அன்றன்றும் உம்பெயரை நெஞ்சால் போற்றி
அகமகிழ்ந்தோம் ஆகையினால் உரிய நாளில்
ஒன்றுபட்டோம் சூலுற்று வளர்ந்த பின்னர்
உறுநாளில் கன்றீன்றேன்; களிப்பும் கொண்டேன்
இன்றுவரை துன்பத்தை அறியா வண்ணம்
இருவருமே கன்றோடு மகிழ்ந்தி ருந்தோம். 8
வேங்கை ஒன்று துரத்தியது
இனத்தார்கள் யாமெல்லாம் ஒன்று கூடி
இலைதழைகள் பசும்புல்லை மேய்ந்த வண்ணம்
நினைத்தாலும் மகிழ்ச்சிதரும் நிலையில் ஓர் நாள்
நீர்பருகி விளையாடி இருந்த வேளை
சினத்தாலே தாக்கவரும் வேங்கை ஒன்று
செய்கின்ற ஒலிமுழக்கம் கேட்டு நாங்கள்
தனைத்தானே காக்கின்ற தன்மை யாலே
தறிகெட்டுச் சிதறுகின்ற நிலைமை உற்றோம். 9
|