|
வேடனிடம் மாட்டிக் கொண்டேன்
உயிர்காக்க ஓடுகின்ற ஓட்டம் என்றால்
உணர்வில்லா ஓட்டம்தான்; இடைம றித்தல்
எயில்தானே என்றாலும் எவர்க்குத் தோன்றும்
இயைந்தபடி ஓடுவதும் இயல்பே அன்றோ?
பயிலாத திசைஒன்றின் பக்கம் ஓடிப்
பதுங்கிவிட நினைத்தயான் வழியில் இந்த
அயலானின் வலைக்குள்ளே மாட்டிக் கொண்டேன்
அடியேனைக் கட்டிவந்திவ்விடத்தே போட்டான். 10
சாவுக்கு அஞ்சவில்லை
“திருக்குர்ஆன் அருள்மறையைத் தெரிவித்தோயே!
தேயத்தில் பிறக்கின்ற உயிர்கள் யாவும்
பெருக்குற்று நிலைத்திங்குத் தங்க லாலே
பெருமைஇலை விளைவெல்லாம் அழிவே யாகும்
தருக்குற்று வாழ்கின்றோர் இதனை எண்ணித்
தகுவழியில் தம்வாழ்வைச் செலுத்தல் வேண்டும்
ஒருக்குற்றம் இல்லாத வாழ்வால் தானே
உயர்வடைய இயலுமெனக் கூறி அம்மான்; 11
என் துணைமானை நினைத்தே வருந்துகிறேன்
நினைக்கின்ற இன்பமெல்லாம் துய்த்து விட்டேன்;
நிலையாமை தனையானும் உணர்ந்து கொண்டேன்;
எனக்கிந்த வாழ்க்கைஇனி வேண்டா என்று
இருக்கின்றேன்; என்மேனி தன்னை வேடன்
தனக்கென்றே அளித்தாலும் பெருமை கொள்வேன்;
தாயன்ன பெருமனத்தீர்! என்றன் அன்புத்
துணைக்கெந்த நிலை? என்றே கவலை கொண்டேன்
துளிப்போதும் பிரிந்தறியாத் தன்மை யாலே; 12
|