|
ஐயோ! என் கன்றின் நிலை யாதோ?
அரிதாகப் பெற்றெடுத்த என்றன் கன்றோ
அவனியிலே பிறந்துநாள் மூன்றே ஆகப்
பிரிவதனால் எந்நிலைதான் அடைந்த தேயோ?
பேணிடுவார் நிலைதானும் அறிய மாட்டேன்
தெரிகின்ற தளிர்கொழுந்தைக் கறிக்கக் கூடத்
தெரியாத குழந்தையாகும் என்றன்
மார்பில்
சொரிகின்ற பால்பெருக்கோ சுரந்து கொல்லும்
சூழ்கின்ற பரிவதனால் கலங்கு கின்றேன். 13
எனக்காகப் பிணை இருங்கள்
எனக்காக அல்லாமல் என்றன் சேயின்
இயல்காக்க எனைத்தாங்கள் விடுக்க வேண்டும்
கணக்காக நான்சென்று கன்றைக் கண்டு
காப்பாற்றி வைத்து விட்டு மீள்வேன் ஈங்கே
பிணைக்காக நீவிரிங்கே இருந்தால் போதும்
பிழையின்றி வந்திடுவேன்” என்று சொல்லித்
தனைக்காக்க வேண்டுமென்று தக்க மானும்
தரைகாக்க வந்தவர்முன் தாழ்ந்து வேண்ட; 14
மானை அனுப்பி வை வந்துவிடும்
தான்என்னும் தன்மையின்றித் தமிழைக் காக்கும்
தன்மையுள சான்றோனைப் போல் வந்து
தீன்என்னும் பயிர்காக்க வந்த அண்ணல்
தெளிவாகப் பேசிய அம்மானின் பேச்சு
தேன்என்னச் செவிக்கண்ணே பாய்ந்த தாலே
திகைத்தவனாய்க் கண்டிருந்த வேடன் தன்பால்
“ஊன் உண்ண உனக்கு வரும் இந்த மானை
உடன்விடுத்தால் பாலூட்டித் திரும்பும்” என்றார். 15
|