புதுமுறையில் கூறுகின்றீரே
“அதுவரையில் நானிருப்பேன் கவலை வேண்டாம்
அவிழ்த்துவிடு” கென்று சொலும் பெரியீர்! கேளும்
எதுவரையில் விலங்கினங்கள் சொல்லைக் காக்கும்?
எவ்விலங்கு தப்பித்து மீண்டும் மாட்டும்?
இதுவரையில் இவ்வாறு சொன்னார் யாரோ?
இப்போதும் நீரன்றி எவர்தாம் சொல்வார்?
புதுமுறையில் புகல்கின்றீர்? என்று கூறிப்
புன்னகைத்தே அன்னவரை நோக்க லானான். 16
ஒரு மானுக்குப் பதில் இருமான் தருவேன்
காவலனார் வேடனவன் கருத்தைக் கேட்டுக்
“கலங்காதே வேடுவனே! கட்டவிழ்ப்பாய்;
பாவமந்த மான்சென்று பாலை ஊட்டிப்
பக்குவமாய்த் திரும்பிவரும்; வாராவிட்டால்
ஆர்வமுடன் இருக்கின்ற நின்ற னக்கே
ஆகுமென மான்இரண்டு தந்து செல்வேன்
ஏவலிடும் என்கருத்தை ஒப்பிச் செய்க
என்றென்றும் நன்மையதே நடக்கும்” என்றார். 17
மானை அவிழ்த்து விட்டான்
“மாசுமறு இல்லாத நெறியே பேசும்
மகம்மதுவின் கருத்தைப்போல் திரும்பி வந்தால்
பேசுபுகழ் நமக்காகும்; இல்லை என்றால்
பிழையில்லை மான்இரண்டு கிடைக்கும்” என்றே
வீசுமுடை நாற்றத்தான் விளக்கம் பெற்று
“வித்தகரே மான்தன்னை விடுக்க” என்றான்;
ஈசனவன் தூதுவனார் விரைந்து மானை
இக்கட்டில் இருந்தே கட்டவிழ்த்து விட்டார். 18
|