பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்211


தாய்மான் ஓடியது தேடியது

தளைநீக்கி எழுந்ததுமான் தலைவ னார்முன்

தலைவணங்கிக் கலிமாவை ஓதிப் பின்னர்

வலைநீக்கி இசைவளித்த வேடன் தன்னை

வாழ்த்திசைத்துக் காட்டுக்குள் விரைந்து சென்றே

இலைநீக்கி இலைநீக்கிக் கனிகாய் தேடும்

இயல்பினிலே தன்துணையைக் கன்றைத்தேடி

மலைநீங்கிச் சென்றதும்தன் இனங்க ளுக்குள்

மணவாளன் குழந்தையொடும் இருக்கக் கண்டே; 19

தன் நிலையைப் பெண்மான் கூறியது

பெருத்தமடிப் பாலூட்டிக் கன்றைப் பேணிப்

பின்வேடன் வலைக்குள்ளே மாட்டிக் கொண்டு

வருத்தமுற்ற செய்திஎலாம் வகையாய்க் கூறி

வாய்மைவளர் கோமானின் வருகைக் கான

பொருத்தமதும் உரைத்துப்பின் ஒருவாறாகப்

போகவிடை பெறப்போகும் நிலையில் அன்பே

பெருத்தஅதன் ஆண்மானோ தடுத்துக் கூறப்

பெண்மானோ தன்நிலையை விளக்கிற்றேயால்; 20

மானம் காக்க உடனே போக வேண்டும்

பெருமானார் பிணைஇருக்கப் பிழைத்து வந்தேன்

பேச்சளித்த படி நானே போக வேண்டும்

“வரும்மானே வரும்மானே” என்று வேடன்

வழிமேலே விழிவைத்துப் பார்த்திருப்பான்

ஒருமான்நான் வராவிட்டால் இரண்டுமானை

உனக்களிப்பேன் எனச்சொன்ன வாய்மையோனின்

பெருமானம் காப்பதற்குப் போவேன்” என்று

பெண்மானும் ஆண்மானை வேண்டிச் செல்ல; 21