பக்கம் எண் :

212துரை-மாலிறையன்

கன்றும் உடன் வந்தது

‘அம்மாவைப் பிரிந்திடவே ஒப்பேன்’ என்றாங்(கு)

அருங்கன்று முன்செல்லத் தாயும் ஒப்பிச்

செம்மாண்புப் பெரியோரைக் காணு தற்குச்

சிந்தையிலே நீ விருப்பம் கொண்டா யாகில்

“அம்மாவைப் பின்தொடர்வாய்” என்று கூறி

அம்மாமான் முன்செல்லக் கன்றும் ஏகப்

பெம்மானும் இருமான்கள் வருகை காட்டிப்

பெருவேடன் முன்னிதனை எடுத்துச் சொன்னார். 22

வேடன் மனம் மாறினான்

பிணைநின்ற பெருமான்முன் இருமான் வந்து

பிணைநீக்கித் தம் பெருமை தன்னைக் காட்டக்

கணைவேடன் இந்நிகழ்வைக் கண்டபின்னே

கருத்தொன்றிப் பெருமானின் அருமை கண்டான்

இணையில்லா இசுலாத்தைப் பரப்ப வந்த

எழில்வேந்தே! என்றனக்கும் உரிய தான

துணையாகி நன்னெறியை உரைப்பீர்” என்றான்

தூயமனம் கொண்டவனாம் வேடன் அன்றே. 23

வேடன் பெரும் பேறு பெற்றான்

இறைவாழ்த்தின் பெருமையினை எடுத்துக் காட்டி

இதயத்தின் தூய்மையினை விரித்துக் கூறி

மறைகாட்டும் நன்னெறியை மலர்த்திக் காட்டி

மகம்மதுநற் பெருமானார் வேடனுக்கு

முறைகாட்டி இசுலாத்தின் மாண்பும் காட்டி

மூலமந்தி ரம்முழுதும் காட்டி அன்பின்

நிறைகாட்டி வேடனுக்கோர் நிழலும் காட்டி

நெடும்பேறும் வழங்கினார் நேர்மை யாரே! 24