இனிப் பாவம் செய்ய மாட்டேன்
திருந்தியவன் நல்வேடன் மான்கள் தம்மைத்
திரும்பவும் காட்டுக்கே அனுப்பி வைத்தான்
வருத்தியவன் “இனிமேல் யான் கொலைப் பாவத்தை
மனத்தாலும் எண்ணுகிலேன்” என்று கூறிப்
பொருந்தியநல் முகம்மதுவின் பாதம் பற்றிப்
புண்ணியனாய் வாழ்வதற்கே உறுதி பூண்டான்;
அருந்தலைவர் நபிக் கோமான் அடவி நீங்கி
அன்புடையோர் தங்களுடன் இல்லம் சேர்ந்தார். 25
நபிகள் நாயகத்தின் மாண்பு
காசாகும் என எண்ணி வாழ்க்கை எல்லாம்
கயமைக்குள் புரள்வாரும் இரக்கம் இன்றிக்
கூசாமல் குற்றங்கள் புரிந்து வாழும்
கொடுந்தீய மனத்தாரும் திருந்தி வாழப்
பேசாத மான் தன்னைப் பேச வைத்தும்
பிணைநின்றும் அருள்செய்தும் பெருமை கொண்டார்
பூசாமலேயே மான் மதத்தின் மேன்மைப்
புகழ்மணத்து மேனிகொண்ட நபியார் தாமே! 26
நீர் வல்லவரா?
சொல்லரிய நபித் தோழர் சூழ்ந்து வாழ்த்த
சுடர்முகத்தார் நடுவினிலே அமர்ந்திருந்தார்
பல்லரிய கருத்துரைகள் எடுத்துக் கூறிப்
பகைக்குநரும் உளம்திருந்த வாய்ப்புத் தந்தார்
நல்லவையுள் நாடி வந்தான் அரபு வேடன்
நறுமென்கை முகம்மதுவை நேரில் கண்டு
“வல்லவர்நீர் எனக்கூறி வருகின் றீரே
வாய்மைஉரை யா?அதனைச் சொல்லும்” என்றான். 27
|