சான்று காட்டுக
“ஏதேதோ சொல்லுகிறீர் எவரும் காணா
எதைஎதையோ செய்கின்றீர்? செய்கைக் குள்ளே
சூதேதோ இருக்குமெனச் சொல்வார் உண்டு
சுடர்மனத்துப் பெரியார் நீர்உண்மை என்றால்
‘ஈதோ பார்’ எனக்கூறிச் சான்று தன்னை
இயற்றிஇங்குக் காட்டிவிட வேண்டும்” என்றான்.
மாதேவன் தூதுவந்த மனத்தினாரும்
மாந்தர்முன் முகமலர்ச்சி கொண்டு நின்றே! 28
என்ன சான்று வேண்டும்?
ஆண்டவனின் தூதுவன் யான் ஐயம் இல்லை
அரபியனே! மனத்தெளிவை அடைவாய் இன்றே
வேண்டுகின்ற சான்றென்ன? விரைந்து கேட்பாய்
வியப்படைய வைத்திடுவேன்; இதனைச் செய்தால்
தூண்டுகிற இறைஒளியை நாடி வந்து
தூய இசுலாத்துக்கே மாற வேண்டும்
ஈண்டதனைக் கேள்” என்றார் இசுலாம் நாதர்
இனியவனும் உடன்பட்டான் கேட்பதற்கே! 29
ஈச்சங்குலையை வரவழைக்க வேண்டும்
“ஆங்கிருக்கும் ஈச்சமர உச்சி மீதில்
அமைந்திருக்கும் அழகான குலையின் தொங்கல்
பாங்குடைய அவ்வீச்சங் குலையை நீவிர்
பணிவுடனே அருகுவர அழைக்க வேண்டும்
ஈங்கிதனை உடன் செய்க” என்றான் வேடன்
ஈகையினார் ஈச்சமரக் குலையை நோக்கி
“ஈங்கே வா ஈந்துமரக் குலையே” என்றார்
எழிற்குலையும் மரத்தினின்று பெயர்ந்து சென்றே; 30
|