பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்215


குலையை மீண்டும் போகச் செய்க

ஆதிமுதல் தூதுவரின் அருகில் நிற்க

ஆங்குள்ள அனைவருமே வியந்து கண்டார்

பாதி மனம் மாறி விட்ட அரபி வேடன்

பார்த்தவுடன் பணிவுடனே அவரை நோக்கி

“ஓதுபுகழ் மிக்கவரே! நேரில் வந்த

உறுகுலையை மீண்டும்அதன் இடத்தில் போகச்

சாதியுங்கள்” என வேண்டிக் கொண்ட வாறே

சாதித்தார் முகம்மதுவாம் ஆண்மை ஏறே! 31

காட்டு அரபியன் மனமாற்றம் அடைதல்

உணர்வில்லாப் பொருளதுவும் ஐயன் ஆணை

உரைதனக்குக் கட்டுப்பட்டியங்கும் போதில்

உணர்வில்லார் சிலர் தங்கள் உயர்வு தன்னை

உணராமல் பொய்ந்நெறி போய் அழிகின்றாரே!

இணையில்லார் இவர் நெறிதான் வாய்மை என்றே

இசுலாத்தின் மறைபொருளாம் கலிமா ஓதித்

துணையானான் முகம்மதுவின் சுடர்நெறிக்கே

தூயகாட் டரபியனும் அந்நாள் தொட்டே! 32

இசுலாம் நெறியை எதிர்த்தல்

நாமும் நந்தம் முன்னோரும் நாளும் பழமைச் சமயத்தால்
தீமை ஏதும் இல்லாமல் தேர்ந்து தெளிந்து வாழ்கின்றோம்
ஊமையாக வாழ்வோமோ? உதவா நெறியைச் சார்வோமா?
ஆமைபோல வாழ்ந்தாலும் அம்முகம்மதுவை ஏற்போமா? 33

அடித்தாலும் வதைத்தாலும் அல்லாவே என்பான்

கலிமா கூறச் செய்கின்றான்

கடவுள் உருவை ஏய்க்கின்றான்

எலிதான் தன்னைப் புலி என்றால்

ஏற்றுக் கொண்டு பணிவோமோ?

வலிதான் தரவே புடைத்தாலும்

வாங்கிக் கொண்டும் பொறுக்கின்றான்

ஒளிதான் இறைவன் உருவென்றும்

உளறிக் கொண்டு வருகின்றான். 34