ஊரைவிட்டு விலக்கி வைத்தனர்
கூடிநின்றார் அனைவரையும் கூட்டத்தோடு துரத்திடுவோம்
வாடி இருந்தால் திருந்திடுவார் வம்பு செய்யார் எனக்கூறிப்
பீடில் பழமை நெறியாளர் பேசி ஏசி முகம்மதுவை
நாடி வரும் வான் தூதுவரை நாட்டில் விலக்கி வைத்தார்கள்; 35
விலக்கி வைத்தும் கலிமா ஓதுகிறார்
விலக்கி வைத்த செயலெல்லாம் விழலாய்ப் போக, எதிர்த்தவரைக்
கலக்கி விட்ட அருளாளர் கனிவாய்க் கண்டு மற்றவரின்
நிலைக்கு வருந்தி இசுலாத்தின் நெறியைப் பற்றி விளக்கிடுவார்
மலைக்கு நிகராம் மாண்புள்ள மாந்தர் நபிகள் நாயகமே! 36
இவனை என்ன செய்யலாம்?
நல்லார் நபியார் பட்டத்தை நல்கி விட்ட ஏழாண்டில்
வல்லார் எல்லாம் ஒருங்கிணைந்து வந்த முகரம் மாதத்தில்
பல்லோர் அறிய முதல்நாளில் பகையார் தொகையாய் வகையாக
எல்லா வழியும் ஆராய்ந்தார் இன்னல் செய்யும் நெஞ்சோடே. 37
ஆசிம், முத்தலிப்பு இனத்தவரை ஒதுக்குவோம்
இசுலாம் பக்கம் இருப்பவர்கள் எல்லா ரையும் ஒன்றாக்கிக்
கொசுவாய் எண்ணி விரட்டிடுவோம் கூட்டத் தோடு விலக்கிடுவோம்
இசையும் ஆசிம் கிளைஞரையும் இனும்முத் தலிப்பு உறவையும் நம்
திசையில் திரும்பா வண்ணத்தில் தீர்ப்புக் கூறி அனுப்பிடுவோம். 38
ஊரார்கள் உதவக் கூடாது
விலக்கி வைத்த எவருக்கும் வேண்டும் எதையும் தாராமல்
நிலத்து நீரை நெருப்பினையும் நீட்டிக் கொடுக்கக் கூடாது
கலத்தை எடுத்துக் கொடுப்பதுவும் கரந்துகரந்து ஆங்கு உதவுதலும்
நலத்தை நாடி அறிவதுவும் நடவா தென்றே அறிவித்தார்; 39
கசுரசு இனத்தார்முன் அவசு இனத்தார் தோற்றனர்
அறிவித் திட்ட அந்நாளில் அழகு மிக்க மதினாவில்
அறுபதி ரட்டும் எண்ணாண்டாய் அவசு கசுர(சு) என்போர்கள்
வெறியார் பகையால் போரிட்டார் வெற்றிகொண்ட கசுரசுமுன்
உறுபோர் செய்த அவசினத்தார் ஒருபோ தினிலும் வென்றதில்லை; 40
|