பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்21


2. வளர்ப்புப் படலம்

குனைன் சிற்றூரில் கொடிய வறுமை

மக்காநல் லூரை ஒட்டி மதிப்புறு சிற்றூர் உண்டாம்
அக்காலம் குனைன் என்பார்கள் ஆகாத வறுமைக் கோட்டில்
சிக்கிய தாலே அந்தச் சிற்றூரில் வாழ்ந்து வந்த
மக்களோ நிலைமை மாறி மக்காவை நாடிப் போனார்; 1

சிற்றூர் நலங்களை இழந்தது

வேலையைத் தேடிப் போனார் மெய்வலி உள்ள மக்கள்
ஆலையைத் தேடிப் போனார் அருந்தொழில் கற்ற மக்கள்
சோலையை நாடிப் போனார் தோட்டத்தில் உழைக்கும் மக்கள்
பாலையாய் மாறிச் சிற்றூர் பண்பினை இழந்ததாலே; 2

பலர் உயிரை விட்டனர்

ஆண்களும் பெண்கள் தாமும் அரும்பசிச் சேய்க ளோடு
காண்கனிக் கிழங்கு காயைக் களிப்பூட்டும் பசுந்தழையை
வீண்ஆன தானியத்தின் விதைகளை உணவாய்க் கொண்டார்
ஊண் வேறும் அகப்படாமல் உடல்வற்றி உயிரும் விட்டார்; 3

ஊக்கம் எல்லாம் பாழாயிற்று

கூழுக்கும் வழிஆங் கில்லை குடிநீர்க்கோ பெரிய தொல்லை;
“பாழுக்கே வாழ்வோம்” என்று பகர்ந்தாரும் உயிரை விட்டார்
ஊழுக்குப் பெருமை தந்தார் ஊருளார் எல்லா ருக்கும்
பாழ் ஊக்கம் இருந்த போதும் பயனற்றுப் போன தாலே! 4

உயிரினங்கள் உருவம் மாறின

மாடுகள் ஆடுகள் போல் மாண்புடல் இளைத்துப் போக
ஆடுகள் குறுமுயல் போல் ஆகவும் முயல்கள் எல்லாம்
ஓடும் வெள்ளெலிகள்ஆக உறுஎலி உருவம் மாறித்
தேடும்வெண் புழுப்போல் ஆகத் திகைத்தனர் மக்கள் எல்லாம்; 5