பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்219


இபுனுகலபு தோற்றதால் நூறு ஒட்டகம் தந்தான்

இருவர் ஒப்பந் தம்படியே எதிர்த்த போரில் உரோமியர்கள்
பெருமை யோடு வென்றார்கள் பேச்சின் படியே இபுனுகலபு
அருமை யான ஒட்டகங்கள் அனுப்பி வைத்தான் ஆங்கவற்றை
உரிமை கொண்ட அபூபக்கர் ஒப்ப டைத்தார் நபியார்க்கே! 52

ஒட்டகங்களை ஏழைகளுக்குக் கொடுத்தார்

மாற்றார் கண்டு பொறாமையுற மாண்பு நபியார் ஒட்டகத்தை
ஏற்ற வறியார் எல்லார்க்கும் ஈந்தார் வண்கை அதனாலே;
சாற்றும் நபிப்பட் டம்பெற்றுச் சரியாய் ஆண்டொன் பதாயிற்றே
ஆற்ற லாரை ஊர் நீக்கி ஆண்டும் இரண்டு சென்றனவே! 53

ஊர் விலக்கம் செய்த சீட்டைக் கறையான் அரித்தது

ஊரை விட்டு விலக்கியதாய் உரைத்துக் ககுபா உயரத்தில்
பேரை எழுதிக் கட்டியதாம் பெரிய சீட்டின் எழுத்துக்கள்
கூர்வாய்க் கறையான் அரித்த தெனக் கோமான் நபிகள் பெருமானார்
ஆரும் வியக்க அறிவித்தார் அபூத்தாலிப்பும் அதைக் கொண்டே; 54

நேரில் சென்று சோதித்தனர்

ஊருக் கெல்லாம் தெரிவித்தார் ஒவ்வாச் சிலரோ எதிர்த்திட்டார்
பேரும் புகழும் பெறும் ஐந்து பேர்கள் அதனைச் சோதிக்க
நேரில் பார்க்கப் போனார்கள்; நெருங்கச் சிலரோ எதிர்த்தார்கள்;
தேரா தவனாம் அபூசகுலும் தேடி எடுத்தான் சீட்டினையே! 55

அல்லாவின் பேர் மட்டும் இருந்தது

ஊரை விட்டு விலக்கியதாம் உரைகள் இன்றி அல்லாசீர்ப்
பேராம் ஒன்றே இருப்பதனைக் காணும் பேறு பெற்றனராம்
சீரும் உடைய அபூசகுலும் செம்மை நபியின் நலம் கண்டான்
ஆரும் போற்றும் அண்ணலவர்அருமை எண்ணி வியந்தானே. 56

முறிச்சீட்டு எழுதியோன் கை விளங்காமல் போனது

“முறியை எழுதும் அந்நாளே முதலில் எதிர்த்தேன் நான்” என்றான்
அறியார் கூறி அறிவித்த ஆணை தன்னை எழுதியபுன்
நெறியான் கைகள் வினையற்று நீர்மை இழந்து போனதனை
அறியார் எவரும் இல்லை என அறைந்தார் ஆங்கே பெரியோரே! 57