பக்கம் எண் :

220துரை-மாலிறையன்

நபிபெருமான் தோழர்களுடன்

தக்கவர் புகழ்ந்து போற்றும் தன்மையில் சிறந்த தான
மக்கமா நகரில் ஓர்நாள் மகம்மது தோழர் சூழச்
செக்கவே சிவந்த வாய்ச்சொல் சிந்தனை சிறக்கக் கூறி
மக்களின் துன்பம் நீக்கும் மணிநெறி விளக்கி வந்தார். 58

குசைன் என்பான் உருவவழிபாடு செய்வான்

புடைத்த தோள் படைத்த மாந்தன் புகழ்மிகும் குசைன் என்னும் பேர்
உடையவன் அரபி யாவான் உண்மையை உணர்ந்து கொள்வான்;
இடைஇடை நல்லார் கூறும் இன்னுரை மகிழ்ந்து கேட்பான்;
உடையதன் வீட்டில் வானோர்க்கு உருவைத்து வணங்கி வந்தான். 59

எங்கே வந்தாய்? என்று நபியார் கேட்டார்

இன்னவன் அண்ண லாரின் எதிரினில் வணங்கி வந்தான்
பன்னலம் செய்து காட்டிப் பாவிகள் திருந்தச் செய்யும்
மன்னவர் நபிகள் அந்த மாந்தனை அருகழைத்தே
“என்னவா எங்கு வந்தாய்? இங்கு வா” என்று கூறி; 60

அல்லா மீது பற்று வை

அருகினில் அமர்த்திக் கொண்டார் அன்பினால் அணைத்துக் கொண்டார்
பெருகிய மதிப்புத் தந்து பேசினார், “குசைனே! இன்னும்
அருகில் ஏன் வரவே இல்லை? ஆண்டவன் அல்லா மீதில்
உருகிய பற்று வைத்தே உறவு கொண் டிடுவாய்” என்றார். 61

“மேலவா நீ மேலே வா” என்றார்

“மூலமந் திரத்தைக் கூறி முசுலிமாய் ஆகி விட்டால்
காலமும் நன்மை காண்பாய் கவலைகள் மறைந்து போகும்
சாலவும் பெருமை யாவும் சார்ந்திடும் பேறு கொள்வாய்
மேலவா! என்று கூறி மேலோர்முன் னேறச் சொன்னார். 62

நபியே நீர் செய்யும் புதுமைகள் கண்டேன்

கோமகன் கூறக் கேட்ட குசைன் எனும் அன்புத் தோன்றல்
“மாமுகம் மதுவே நீவிர் மலர்த்திய வாய்ச்சொல் போல
ஆமிகப் புதுமை எல்லாம் அடிக்கடி கண்டும் உள்ளேன்
நாமிக மகிழ்ந்து போற்றி நல்லுரை தந்தும் உள்ளேன்” 63