பலவகைப் புதுமைகள் செய்துள்ளீர்
ஊன்சதைக் கட்டி தன்னை உருப்பெண்ணாய் மாறச் செய்தீர்;
மான்தனி மாந்தன் போல மணிஉரை நிகழ்த்த வைத்தீர்;
வான்தனி நிலவு தன்னை வரச்செய்தீர் இருளில் அந்நாள்;
ஏன்? தவழ் உடும்பைக்கூட இன்னுரை வழங்க வைத்தீர்; 64
எவ்வாறு உங்களை நம்புவது?
“இவ்வணம் புதுமை எல்லாம் இயற்றிட வல்லீ ரேனும்
செவ்வணம் உரைகள் ஆற்றிச் சிந்திக்க வைப்பீரேனும்
அவ்வணம் உமது கூற்றை அகத்தினால் நம்பி மாறல்
எவ்வணம் என்று தான்யான் எண்ணியே மறுத்து வாழ்வேன்”. 65
உம் வீட்டு உருவத்தைப் பேச வைப்பேன்?
என்றவன் குசைனை நோக்கி ஏந்தலார் “நன்று சொன்னீர்
அன்று நான் செய்த வெல்லாம் அகத்தினில் நிறுத்தி வைத்தீர்
இன்றுநான் தங்கள் வீட்டில் இருந்திடும் உருவம் தன்னை
ஒன்றியே பேச வைத்தால் உரைப்பீரா கலீமா?” என்றார். 66
“அவ்வாறே செய்க” என்றான்
“பெரியரே! தாங்கள் சொன்ன பேருரு தன்னை வீட்டில்
தெரிவுற அறுபதாண்டு திகழ்வுற வணங்கி வந்தேன்
உரியதாய் இருந்தும் கூட ஒருசொலும் வழங்க வில்லை
அரியதாய்க் கூறி உள்ளீர் அவ்வாறே செய்க” என்றான். 67
வீட்டுக்குச் சென்று உருவைக் கொண்டு வருவேன்
“சொல்லிய வாறே அந்தச் சுடர்உரு பேசி விட்டால்
புல்லியன் யானும் தங்கள் புகழ்நெறி தன்னை ஏற்பேன்
மல்லிகை மணத்தைப்போல மாண்புரை நிகழ்த்தி விட்டீர்
இல்லினை அடைந்து மீள்வேன் ஈண்டுநான் உருவோடு” என்றான். 68
உருவினை இறக்கி வைத்தான்
மடமடவென்று சென்று மதித்த அவ்வுரு வெடுத்துக்
கடன்முறை யாலே நல்ல கவின்மலர் கட்டிச் சூட்டிப்
படர்துணி போர்த்து வைத்துப் பசும்புகை படரக் காட்டித்
தடந்தோளில் தூக்கி வந்து தகுதியால் இறக்கி வைத்தான். 69
|